மலைப்பகுதி டாஸ்மாக் மதுக்கடைகளில் காலி மது பாட்டில்களை திரும்பப் பெறும் திட்டம் திருப்தியளிக்கும் வகையில் அமல்படுத்தப்பட்டுள்ளதாகவும் இந்த திட்டத்தை கோவை, பெரம்பலூரில் ஏப்ரல் 1ம் தேதி முதல் துவங்க தமிழ்நாடு அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் இன்று பரிந்துரை செய்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

 

 

மலைப்பகுதிகளில் மதுவை குடித்து விட்டு கண்ணாடி பாட்டில்களை மது பிரியர்கள் வீசி செல்வதால் ஏற்படும் பாதிப்பை குறைக்க, ₹10 அதிகமாக விற்பனையின் போது வாங்கப்பட்டு அதன் பின்னர் பாட்டில்களை திரும்ப செலுத்தும் போது அந்த ₹10 ரூபாயை திரும்ப வழங்கும் திட்டம் கொடைக்கானல், ஏற்காடு, ஏலகிரி, சிறுமலை, கொல்லிமலை, மேகலமலை, டாப் சிலிப் போன்ற மலைவாசஸ்தலங்களிலும், தேசிய பூங்காக்கள், சரணாலயங்களிலும் அமல்படுத்த சென்னை உயர் நீதிமன்றம் அண்மையில் உத்தரவிட்டது. 

 

 

தமிழ்நாடு முழுவதும் மலைப்பகுதிகளில் உள்ள 163 கடைகளில் இத்திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளதாகவும், நீலகிரியில் 78% பாட்டில்கள் திரும்பப் பெறப்பட்டுள்ளதாகவும், வேலூரில் 98%, திண்டுக்கல்லில் 91%, தர்மபுரியில் 99%, கிருஷ்ணகிரியில் 98% பாட்டில்கள் திரும்பப் பெறப்பட்டுள்ளது என தகவல்கள் தெரிவிக்கின்றன. 

 

இந்த திட்டம் அமல்படுத்துவதில் உள்ள முன்னேற்றம் குறித்து அரசுக்கு நீதிபதிகள் பாராட்டு தெரிவித்தனர்.

 

மேலும் கோவை, பெரம்பலூரில் காலி பாட்டில்களை திரும்பப் பெறும் திட்டத்தை ஏப்ரல் 1ம் தேதி முதல் துவங்கலாம் என்று தெரிவித்துள்ளனர்.