கோவை மாநகரில் உள்ள உடையாம்பாளையம் எனும் பகுதியில் சாலையோரத்தில் பீப் பிரியாணி கடை நடத்தி வரும் ஆண் பெண் இருவரிடம் ஒரு நபர் இந்தப் பகுதியில் அவ்வாறு பீப் பிரியாணி கடை போடக்கூடாது என விவாதம் செய்யும் வீடியோ தற்பொழுது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. 

 

விவாதத்தில் ஈடுபடும் அந்த நபர் பீஃப் பிரியாணியை இந்தப் பகுதியில் விற்கக் கூடாது எனவும், அவ்வாறு இந்த பகுதியில் கடை போட வேண்டும் என்றால் பீப் பிரியாணியை தவிர வேறு உணவுகளை விற்கலாம் எனவும் கூறியது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. 

 

அந்தக் கடையில் பணி செய்யும் பெண் விவாதம் செய்யும் அந்த நபருடன் பேசுகையில், இங்கு மீன் கடை கூட செயல்படுகிறது, இங்கு இறைச்சி உணவுகளை விற்கக் கூடாது என்றால் அனைத்தையும் எடுக்க சொல்லுங்களேன் என பதிலுக்கு துணிச்சலுடன் விவாதம் செய்தார். 

 

கடையை உடனே அகற்ற வேண்டும் என்று அந்த நபர் கூறியதற்கு, அவ்வாறு அகற்றிட முடியாது என்று அந்தப் பெண் உறுதியாக நின்று விவாதம் செய்துள்ளார். 

 

இந்த கடையில் இருந்த ஆண் ஊழியரும் நாங்கள் யாரையும் வற்புறுத்தி இங்கு வந்து சாப்பிடுமாறு அழைக்கவில்லை என்பதை தெளிவாக அவருக்கு விளக்குகிறார். 

 

இவ்வாறு பிரியாணி கடை நடத்தியவரை நடத்தக்கூடாது என்று விவாதம் செய்த நபர் பாஜகவின் நிர்வாகி என்று தகவல் உள்ளது. மிரட்டியவர் பெயர் சுப்பிரமணி என்பதும், இவர் 12ஆவது வார்டு கவுன்சிலர் பதவிக்கு பாஜக சார்பில் போட்டியிட்டவர் என்பதையும் நியூஸ் 18 தமிழ்நாடு கூறுகிறது.

இந்நிலையில் விவாதத்தில் ஈடுபட்டவர், "ஊர்கட்டுபாடு என்பதால் பீப் கடை போட கூடாது என்று சொன்னேன்" எனக் கூறியுள்ளதாக தகவல் உள்ளது.