பொறியியல் மாணவர்களின் திறன்களை மேம்படுத்துவதற்கான புதிய பாடத்திட்டத்தை நடப்பு கல்வி ஆண்டிலேயே அமல் படுத்தி அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. 

அண்ணா பல்கலைக்கழகத்தில் கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பாக பாடத்திட்டம் வடிவமைக்கப்பட்டது. அப்போதைய தொழில்நுட்பத்திற்கு ஏற்ப பாடத்திட்டம் இருந்தாலும் தினம்தோறும்  மாறிவரும் தொழில்நுட்பத்திற்கு ஏற்ப பாடத்திட்டம் இல்லை என்ற கருத்து இருந்தது. 

தமிழகத்தில் புது அரசாங்கம் அமைந்தபோது, தமிழ் நாடு மாணவர்களின் தொழில்நுட்ப அறிவை மேம்படுத்த உலகளாவிய நவீன தொழில்நுட்பத்தை பாடத்திட்டத்தில் புகுத்த முடிவு செய்யப்பட்டது. 

இதை தொடர்ந்து அமைக்கப்பட்ட குழு அண்மையில்  சமர்ப்பிக்கப்பட்ட பாடத்திட்டத்திற்கு அண்ணா பல்கலைகழக கல்விக்குழு ஆகஸ்ட் 12ம் தேதி நடந்த கூட்டத்தில் ஒப்புதல் வழங்கியுள்ளது. 

இந்நிலையில் அண்ணா பல்கலைகழகத்தின் பதிவாளர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், முதல் 3 செமஸ்டருக்கு தமிழர் மரபு, அறிவியல் தமிழ், தொழில்முறை வளர்ச்சி, English Lab, Communication Lab அல்லது Foreign Language ஆகிய பாடங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. 

முதல்கட்டமாக இரண்டாம் ஆண்டு மாணவர்களுக்கான பாடத்திட்டம் வெளியிடப்பட்டுள்ளதாகவும், மூன்றாம் ஆண்டு மற்றும் இறுதியாண்டு மாணவர்களுக்கான புதிய பாடத்திட்டம் விரைவில் வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நவீன தொழிநுட்பத்திற்கு ஏற்ப மாணவர்களை தயார்படுத்துதல், ஆராய்ச்சி மேற்கொள்ள ஊக்குவித்தல், சராசரி மாணவர்களின் தனித்திறனை வெளிகொண்டுவருதல், தொழில்முனைவோர் ஆக உருவாக்குதல் ஆகிய குறிக்கோள்களை அடிப்படையாக கொண்டு பாடத்திட்ட மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தகவல்.