பிடிபட்டான் அரிசி கொம்பன்!
- by David
- Jun 05,2023
மூணாறு பகுதியில் அட்டகாசம் செய்து விட்டு தேனி மாவட்டத்திற்குள் நுழைந்து பொதுமக்களுக்கு அச்சம் தந்து வந்த அரிசிக்கொம்பன் எனும் காட்டு யானையை இன்று மயக்க ஊசி செலுத்தி கும்கிகள் உதவியுடன் வனத்துறையினர் பிடித்துள்ளனர்.
அரிசி கொம்பனை பிடிக்கும் பணியில் 12 வனத்துறை குழுவினர் 3 கும்கி யானைகளுடன் கம்பம் பகுதியில் முகாமிட்டு இருந்தனர்.
அவர்கள் தேனி மாவட்டம், ராயப்பன்பட்டி சண்முகா நதி அணை அருகில் உள்ள காப்புக்காடு என்ற இடத்தில் அடர்ந்த வனத்தில் நிலை கொண்டிருந்த அரிசி கொம்பனை இன்று அதிகாலை கும்கி யானைகளின் உதவியுடன் சுற்றி வளைத்தனர்.
ஆவேசத்துடன் கும்கிகளை தாக்க வந்த கொம்பனுக்கு 2 மயக்க ஊசிகள் அடுத்தடுத்து செலுத்தப்பட்டது.
இதில் நிலை குலைந்த அந்த யானை மயங்கி விழுந்தது. தொடர்ந்து மூன்று கும்கி யானைகள் வரவழைக்கப்பட்ட நிலையில், அவற்றின் உதவியுடன் அரிசிக்கொம்பனை லாரியில் ஏற்றி மாற்று இடத்திற்கு வனத்துறையினர் கொண்டு செல்கின்றனர்.
அரிசி கொம்பன் கேரளாவில் 10க்கும் மேற்பட்ட உயிர்களை பறித்து உள்ளான்.
தேனி மாவட்டம் கம்பம் நகரில் சாலைகளில் பொதுமக்களை விராட்டி வந்துள்ளான் என்பது குறிப்பிடத்தக்கது.