மின்சார துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கோவையில் தமிழக அரசின் அரசு பள்ளி மாணவர்களுக்கான இலவச காலை உணவு திட்டத்தை இன்று துவக்கி வைத்தார். 

1 வகுப்பு முதல் 5 வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு இலவச காலை உணவு திட்டமானது நேற்று (15.9.22) முதலமைச்சர் ஸ்டாலினால் மதுரையில் துவக்கி வைக்கபட்டது. 

ரூ.33.56 கோடி செலவில் மாநிலம் முழுவதும் உள்ள 1,545 தொடக்கப் பள்ளிகளில் தொடங்கப்பட்ட இந்தத் திட்டம் மூலம் முதல் கட்டமாக 1.14 லட்சம் மாணவர்கள் பயனடைவார்கள்.


 குழந்தைகளை தொடர்ந்து பள்ளிக்கு வருவதை ஊக்குவிப்பதும், ஆரம்ப நிலையில் இடைநிற்றலைத் தடுப்பதும் இத்திட்டத்தின் முக்கிய நோக்கமாக உள்ளது. 


திங்களன்று காலையில் கோதுமை ரவா உப்புமா, காய்கறி சாம்பார், செவ்வாய் அன்று சேமியா, காய்கறி கிச்சடி, புதன் அன்று வெண்பொங்கல், காய்கறி சாம்பார், வியாழன் அரிசி உப்புமா மற்றும் காய்கறி சாம்பார், வெள்ளி சோள காய்கறி கிச்சடி மற்றும் ரவா கேசரி வழங்கப்படும்.  

இன்று கோவையில் இந்த திட்டத்தை துவக்கி வைத்ததுடன் அமைச்சர் செந்தில் பாலாஜி  மாணவர்களுக்கு பரிமாறி  அவர்களுடன் அமர்ந்து உண்டு, அவர்களை பற்றியும், அவர்கள் கல்வி குறித்து பேசி தெரிந்துகொண்டார். 

அவரை போலவே கோவை மாவட்ட ஆட்சியர் சமீரன், மாநகராட்சி மேயர் கல்பனா, மாநகராட்சி ஆணையர் பிரதாப் மற்றும் பலர் அமர்ந்து உண்டனர்.