தமிழ் நாடு பவர் லிப்டிங்  சங்கம் சார்பில் நடைபெற்ற மாநில அளவிலான பவர் லிப்டிங்  போட்டி அண்மையில் திருச்சியில் நடைபெற்றது. 

இதில் பெண்கள் பிரிவில் கோவையை சேர்ந்த மாசிலாமணி (40) கலந்து கொண்டு 77.5 கிலோ எடையை தூக்கி தங்க பதக்கம் வென்றுள்ளார். இவரின் 17 வயது மகள் தரணியும் 72.5 கிலோ எடையை தூக்கி வெண்கல பதக்கம் வென்றுள்ளார். 


ஆனால் இதில் சுவாரஸ்யம் என்னவென்றால்  மாசிலாமணி பொருளாதார ரீதியில் பின்தங்கியவர். அவர் கோவையில் இரண்டு வீட்டில் வீட்டு வேலை செய்துவருகிறார். அவருடைய கணவர் ரமேஷ் ஒரு தினக்கூலி தொழிலாளி. மாதம் கிட்டத்தட்ட 6000 ரூபாய் தான் இவர்கள் சம்பாதித்து வருகின்றனர். 


முன்பு மாசிலாமணி உடல் எடை அதிகமாக இருந்ததால், அது உடல் நலனுக்கு நல்லதல்ல என்று சொல்லி அவர் வேலை செய்த வீட்டின் உரிமையாளர்களே அவர் உடல் எடையை குறைக்க ஜிம்மில் சேர அறிவுரை வழங்கி, அதற்கான செலவையும் ஏற்றுள்ளனர். 

ஜிம்மில் எடை தூக்குவது மாசிலாமணிக்கு பிடித்துப்போக, அதை அவர் அதிகமாக செய்ய துவங்கினார். இதற்கு பின்னர் அவருக்கு முன்னாள் ஆசிய  விளையாட்டு போட்டிகளில் தங்க பதக்கம் வென்ற சிவகுமாரின் அறிமுகம் கிடைத்து, அவர் வழிகாட்டுதலில் பயிற்சிகள் செய்தார். 

தாயை பார்த்து ஊக்கமடைந்து தரணியும் பயிற்சி எடுத்துக்கொண்டார். அதன் விளைவாக  இன்று அவர்கள்  தங்கம் மற்றும் வெண்கல பதக்கங்கள் வென்றுள்ளனர். 

வாழக்கையில் சாதாரண ஒரு வீட்டு வேலை செய்யும் பெண்ணாக இருந்த இவர் தற்போது ஒரு வீராங்கனையாக வளர்ந்துள்ளார். இவரை பார்த்து இவர் மகளும் இளம் வயதிலேயே சாதிக்க துவங்கியுள்ளார். 

தொடர்ந்து இவர்கள் பதக்கங்களை வெல்ல உடலை அதற்காக தயார் செய்ய போதிய நிதியுதவி இல்லை என்பதால்  ஸ்பான்சர் செய்ய நல்ல உள்ளம் கொண்டோர் உதவியும் அரசின் உதவியும் வேண்டும் என்று கூறியுள்ளனர். 




(மாசிலாமணி-தரணியின் வெற்றிப்பயணத்தை இந்திய டுடே நிருபர் அக்ஷய நாத் இந்த செப்டம்பர் 8ம் தேதி  செய்தியாகியிருந்தார்.  அந்த தகவல்களை  மூலமாக வைத்து எழுதப்பட்டது)