இன்னும் ஒரு மாதத்திற்குள் கோவை செட்டிபாளையம் ஓராட்டுகுப்பை பகுதியில் தமிழ் நாட்டில் முதல் முறையாக மாற்று திறனாளிகளுக்கென பிரத்தியேகமாக உருவாக்கப்பட்ட குடியிருப்பு திட்ட பணிகள் நிறைவடைந்து திறக்கப்படும் என தகவல்கள் வெளியாகி உள்ளன.  

இதன் விவரம் பின்வருமாறு :- 

மாற்றுத்திறனாளிகளின் வேண்டுகோளுக்கு இணங்க அரசு சார்பில், 113 தகுதியுடைய, சொந்த நிலம் இல்லாமல் சிரமப்பட்டு வந்த மாற்றுத்திறனாளிகளுக்கு ஓராட்டுகுப்பை பகுதியில் 2023ல் இலவசமாக நிலம் வழங்கப்பட்டது. இதில் 86 பேர் தங்களுக்கு வீடு கட்டித்தர அரசு உதவிட வேண்டும் என அப்போதைய மாவட்ட கலெக்டரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டது. எனவே இந்த 86பேருக்கான குடியிருப்பை அரசு - தனியார் உதவியுடன் இனைந்து முன்னெடுக்க திட்டமிடப்பட்டது. 

2024ல் 3.98 ஏக்கர் நிலத்தில் கட்டுமான பணிகள் துவங்கின. ஒவ்வொரு வீடும் 319 சதுர அடி கொண்டதாக இருக்கவும், அதில் மாற்றுத்திறனாளிகள் எளிதில் உள்ளே செல்ல, வெளியே செல்ல வசதியான சாய்வு தரைத்தளம் அவசியம் இருக்கும். 

இந்த 86 ஒற்றை படுக்கை அரை (1 BHK) வீடுகள் கொண்ட குடியிருப்பின் மொத்த கட்டுமான மதிப்பீடு ரூ.5.59 கோடி எனவும் இதில் ரூ.1.8 கோடி அரசு நிதியாகவும், ரூ.3.68 கோடி நிதி தனியார் அறக்கட்டளை சார்பில் வழங்கப்பட்டதாகவும் தெரியவருகிறது.

இது போக ரூ.1.31 கோடி நிதி குடிநீர் இணைப்பு, சாலைகள், மாற்று திறனாளிகளுக்கான பிரத்தியேக கழிவறைகள் (வீட்டிற்குள்), மற்றும் தெரு விளக்குகள் போன்ற பல வசதிகளுக்காக செலவிடப்பட்டுள்ளது. 1 மாத காலத்திற்குள் இந்த பணிகள் முடிக்கப்பட்டு, குடியிருப்பு திறப்பு விழா நடைபெற உள்ளது.