கோவையில் முதியோர்களுடன் படகு சவாரி செய்த மாவட்ட ஆட்சியர்
- by CC Web Desk
- Oct 01,2024
உலக முதியோர் தினத்தை முன்னிட்டு கோவையில் சமுகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில், தனியார் தொண்டு நிறுவனங்கள் மற்றும் தன்னார்வலர்கள் பங்களிப்புடன் முதியோர் தின விழா கோவை உக்கடம் பெரியகுளம் பகுதியில் நடைபெற்றது. இவ்விழாவில் கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி கலந்து கொண்டார்.
இந்த நிகழ்வில், பல்வேறு முதியோர் இல்லங்களில் இருந்து நூற்றுக்கும் மேற்பட்ட முதியவர்கள் அழைத்து வரப்பட்டிருந்தனர். விழாவின் சிறப்பம்சமாக உக்கடம் பெரியகுளத்தில், மாவட்ட ஆட்சியர் முதியோர்களுடன் படகு சவாரி செய்தார்.
பின்னர் நடைபெற்ற நிகழ்ச்சியில், முதியோர் இல்லங்களை சேர்ந்தவர்களுக்கு மாவட்ட ஆட்சியர் நினைவு பரிசினை வழங்கினார். நிகழ்வில் கலந்து கொண்ட முதியோர்களுக்கு மதிய உணவு வழங்கப்பட்டதோடு வஉசி மைதானத்தில் நடைபெற்று வரும் கண்காட்சியை பார்வையிடவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்நிகழ்வில் செய்தியாளர்களை சந்தித்த மாவட்ட ஆட்சியர், முதியோர் நலனுக்காக மருத்துவ பரிசோதனை உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகள் அரசின் பல்வேறு துறைகள் சார்பில் வழங்கப்பட்டு வருகிறது எனவும் இதனை மேலும் ஊக்குவிப்பதற்கான நடவடிக்கைகளும் மாவட்ட நிர்வாகத்தின் சார்பாக மேற்கொள்ளப்படும் என்றும் கூறினார்.
இது போன்று முதியோர்கள் வெளியில் வருவதால் அவர்களுக்கு சமூகத்துடன் இணக்கம் ஏற்படும் எனவும் இளைஞர்களும் முதியவர்களுடன் இணைந்து கலந்துரையாடினால் நல்ல புரிதல் வரக்கூடும் என்றார்.