பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவங்களால் கோவை மாவட்டம் பதட்டமாக இருந்த சூழலில் பொள்ளாச்சியில் பல இடங்களில் வெடிகுண்டுகள் வீசப்படும் என்ற மிரட்டல் கடிதம் பொள்ளாச்சி போலீஸ் நிலையத்துக்கு வந்தது.


மாவட்டம் பதட்டத்தில் உள்ளபோது அதை என்னும் அதிகமாக பதட்டப்படும் வகையில் இவ்வாறு கடிதம்  எழுதிய உண்மை நபர் யார் என்பதை அறிந்து, அவர் மேல் நடவடிக்கை எடுக்க காவல் துறை முயற்சிகள் எடுத்து வருகிறது.

இதுகுறித்து கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியதாவது: 

பொள்ளாச்சியில் 16 இடங்களில் வெடிகுண்டுகள் வீசப்படும் என போலீஸ் இன்ஸ்பெக்டருக்கு மிரட்டல் கடிதம் வந்தது. பொள்ளாச்சி போலீஸ் நிலையத்துக்கு மிரட்டல் கடிதம் எழுதியவர் பற்றிய தகவல்களை சேகரிக்க தனிப்படை அமைத்து உள்ளோம்.

பொள்ளாச்சி மேற்கு போலீஸ் நிலையம் அருகே உள்ள தபால் நிலைய முத்திரை அந்த கடிதத்தில் இருப்பது தெரிய வந்தது. எனவே அங்கு தபால் போட வந்தவர்கள் யார் என்பதை அறிய கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை தனிப்படை போலீசார் சேகரித்து வருகின்றனர்.

சட்டம் – ஒழுங்கு பாதிக்கும் வகையில் மிரட்டல் தபால் கார்டு அனுப்பிய நபரின் அடையாளத்தை கண்டறிய தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.

பொதுவாக மிரட்டல் கடிதத்தில் அனுப்புபவர்களின் பெயரோ அல்லது அமைப்பின் பெயரோ குறிப்பிடப்பட்டு இருக்காது. ஆனால் இந்த கடிதத்தில் அமைப்பின் பெயர் குறிப்பிடப்பட்டு உள்ளது.

எனவே யாரையாவது சிக்க வைக்கும் நோக்கத்தில் கடிதம் எழுதப்பட்டு இருக்கலாம் என்ற சந்தேகம் உள்ளது என்று அதில் கூறப்பட்டுள்ளது.

இதனிடையே, கடிதம் எழுதிய நபரை கண்டறிந்து கடும் நடவடிக்கை எடுக்கப்படும் காவல் கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன் தெரிவித்துள்ளார்.