நடிகர் சந்தானம் நடிப்பில் நாளை மறுநாள் வெளியாக உள்ள டிடி நெஸ்ட் லெவல் திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள 'கோவிந்தா கோவிந்தா' பாடலுடன் திரைப்படம் வெளியானால் திரையரங்குகளை முற்றுகையிடுவோம் எனவும் திரை கிழிப்பு போராட்டத்தில் ஈடுபடுவோம் எனவும் இந்து மக்கள் கட்சியினர் தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

நடிகர் சந்தானம் நடிப்பில் உருவாகியுள்ள 'டிடி நெக்ஸ்ட் லெவல்' திரைப்படம் நாளை மறுதினம் வெளியாக உள்ளது. இந்த படத்தில் இடம் பெற்றுள்ள 'கோவிந்தா கோவிந்தா' எனும் பாடலில் திருப்பதி வெங்கடாஜலபதியை இழிவு படுத்தும் விதமாகவும் பெருமாள் பக்தர்களை அவமதிக்கும் விதமாகவும் கருத்துக்கள் இருப்பதாக கூறப்படுகிறது.

இதற்கு தமிழகம் முழுவதும் இந்து அமைப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வரும் சூழலில் இந்து மக்கள் கட்சியின் இளைஞர் அணி சார்பில் கோவை மாநகர காவல் ஆணையரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக இது குறித்து பேசிய அக்கட்சியின் இளைஞரணி மாநில பொதுச் செயலாளர் சூர்யா,நடிகர் சந்தானம் நடிக்கும் திரைப்படங்களில் தொடர்ந்து இந்து கடவுள்களை இழிவுபடுத்தும் விதமாக காட்சிகளும் வசனங்களும் இடம் பெறுவதாகவும் நாளை மறுதினம் வெளியாக உள்ள டிடி நெக்ஸ்ட் லெவல் திரைப்படத்திலும் இடம் பெற்றுள்ள கோவிந்தா கோவிந்தா பாடல் பெருமாள் பக்தர்களை இழிவுபடுத்தும் விதமாக அமைந்துள்ளதாக குறிப்பிட்டார்.

மேலும் அந்த பாடலை படத்திலிருந்து நீக்கிய பிறகே படத்தை வெளியிட வேண்டும் எனவும் அப்படி அந்தப் பாடலை நீக்காமல் வெளியிடும் பட்சத்தில் கோவையில் எந்த திரையரங்கில் அந்த படம் வெளியாகிறதோ அந்த திரையரங்குகளை இந்து மக்கள் கட்சி சார்பில் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்படும் எனவும் திரையரங்கிற்குள் சென்று திரையைக் கிழித்து எதிர்ப்பை தெரிவிப்போம் எனவும் கூறினார். இந்து மக்கள் கட்சியினரின் இந்த அறிவிப்பு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.