கோவை செம்மொழி பூங்கா பணிகள் 75% நிறைவு ! பூங்காவில் பிரம்மாண்ட ராட்டினம், 'ஜிப் லைன்' அமைக்க விரைவில் வரைவு திட்ட அறிக்கை
- by David
- May 14,2025
கோவை காந்திபுரம் பகுதியில் செம்மொழி பூங்கா திட்டப்பணிகள் வேகமாக நடைபெற்றுவருகிறது.
செம்மொழி பூங்காவினுள் இருந்து கோயம்புத்தூர் மாநகரப் பகுதியை ரசிக்க ஏதுவாக பிரம்மாண்ட ராட்டினம் அமைக்கவும், செம்மொழி பூங்காவினை உயரத்தில் இருந்து ரசிக்க ஏதுவாக 'ஜிப் லைன்' அமைப்பு ஏற்படுத்தவும் உத்தேசிக்கப்பட்டுள்ளது.
இந்த பிரம்மாண்ட ராட்டினம் மற்றும் ஜிப் லைன் அமைக்க "வடிவமைப்பு, கட்டுமானம், நிதி. இயக்குதல் (ம) பராமரித்தல் மற்றும் ஒப்படைத்தல் (Design,Built Finance,Operate and transfer (DBFOT) ) முறையில் தனியார் பங்களிப்புடன் மேற்கொள்ள திட்டமுள்ளது.
இந்த 2 அமைப்புகளை ஏற்படுத்தும் பொருட்டு "திட்ட முன்மொழிவு கோருதல்" முறைக்கு தேவையான வரைவு திட்ட அறிக்கையினை (RFP draft document ) தொழில் நுட்ப மற்றும் நிதி வல்லுநரை நியமித்து தயார் செய்யவும், மேற்படி தயாரிக்கப்படும் திட்ட அறிக்கைக்கு நிர்வாக அனுமதி வேண்டி நகராட்சி நிர்வாக இயக்குனருக்கு பரிந்துரைக்கவும் கோவை மாநகராட்சியின் மாமன்றம் இன்று அனுமதி வழங்கியது. இதனால் வரைவு திட்ட அறிக்கை தயார் செய்யும் பணிகள் வரும் நாட்களில் நடைபெறும் என எதிர்பார்க்கலாம்.
பூங்காவின் இதர பணிகளில் முன்னேற்றம்!
கோயம்புத்தூரில் 2010 ஆம் ஆண்டு நடைபெற்ற உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டினை பறைசாற்றும் வகையில் காந்திபுரம் மத்திய சிறைச்சாலை மைதானத்தில் செம்மொழிப் பூங்கா அமைக்கப்படும் என்று அப்போதைய தமிழ்நாடு முதலமைச்சர் கலைஞர் கருணாநிதி-யால் அறிவிக்கப்பட்டது.
அதை தொடர்ந்து கோயம்புத்தூர் மாநகராட்சி காந்திபுரம் மத்திய சிறைச்சாலை வளாகப் பகுதியில் முதற்கட்டமாக 45.00 ஏக்கர் நிலப்பரப்பில், ரூ.167.25 கோடி மதிப்பீட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்- னால் அடிக்கல் நாட்டப்பட்டு தற்போது பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன.
உலகத்தரம் வாய்ந்த இப்பூங்காவில் செம்மொழி வனம், மூலிகை தோட்டம், மகரந்த தோட்டம், நீர்த் தோட்டம், மணம் கமிழ் தோட்டம், பாலைவன தோட்டம், மலர் தோட்டம், மூங்கில் தோட்டம், நட்சத்திர தோட்டம். ரோஜா தோட்டம், மூலிகை தோட்டம் மற்றும் பசுமை வனம் போன்ற 23 விதமான தோட்டங்கள் அமைக்கப்பட்டு வருகிறது.
செம்மொழி வனத்தில் சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ள அழிந்து வரும் நிலையில் உள்ள 219 வகையிலான தாவரங்கள் மரங்கள் மற்றும் செடி கொடிகள் நடப்பட்டு வருகின்றன.
மேலும் தமிழ்நாட்டு பாரம்பரிய மரங்கள் 2500 எண்ணிக்கையிலும், மருத்துவ குணமுள்ள தாவரங்கள் மற்றும் மரங்கள் நடும் பணிகளும் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன. செம்மொழிப் பூங்கா வளாகத்தில் நுழைவுச்சீட்டு மற்றும் அனுபவ மைய கட்டிடம், 500 பேர் அமரக்கூடிய வகையில் திறந்தவெளி அரங்கம், பூங்காவில் பணியாற்றும் தோட்ட தொழிலாளர்களுக்கு என பிரத்தியேக தோட்டக்காரர்கள் அறை, உணவகம், சில்லறை விற்பனை நிலையம், செயற்கை நீர்வீழ்ச்சியுடன் கூடிய நுழைவு வாயில் மற்றும் பல முக்கியமான அம்சங்களை கொண்டுள்ளது.
செம்மொழிப் பூங்கா வளாகத்தில் கட்டப்பட்டு வரும் மாநாட்டு மையமானது 1000 பேர் அமரும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதில் கூட்ட அரங்கம், விருந்தினர் மண்டபம், ஓய்வு அறைகள், விருந்தினர்கள் அறைகள் மற்றும் பல முக்கிய அம்சங்களுடன் கட்டப்பட்டு வருகிறது.
அதிகாரபூர்வ தகவல் படி, தற்போது செம்மொழி பூங்கா திட்டப்பணிகளில், தாவரவியல் பூங்கா மற்றும் கூடுதல் மேம்பாட்டு பணிகள் 75% நிறைவு பெற்றுள்ளது. அதேபோல் மாநாட்டு மையம் மற்றும் கூடுதல் மேம்பாட்டு பணிகளும் 75% முடிவு பெற்றுள்ளது.
பூங்காவிற்கு உக்கடம் கழிவுநீர் சுத்திகரிப்பு மையத்திலிருந்து சுத்திகரிக்கப்பட்ட நீரை குழாய் மூலம் எடுத்துவரும் பணியும், பூங்கா வளாகத்தில் தரை தல வாகன நிறுத்துமிட பணியும் 100% நிறைவடைந்து உள்ளது.