கோவை பெரியார் நூலக கட்டிடத்தில் கண் திருஷ்டி படம் : அமைச்சர் எ.வ.வேலு விளக்கமும், அதற்கடுத்து நடந்த சம்பவமும்...
- by David
- Jul 19,2025
கோவை மாநகரில் உள்ள காந்திபுரம் பகுதியில் மத்திய சிறைச்சாலை மைதானம் அருகே தமிழ்நாடு அரசு சார்பில் ரூ.300 கோடி மதிப்பீட்டில், 1.98 லட்சம் சதுர அடி பரப்பளவில், பெரியார் நூலகம் மற்றும் அறிவியல் மையத்திட்ட பணிகள் நடைபெற்று வருகிறது.
இந்த பணிகளை பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு இன்று ஆய்வு செய்தார். ஒப்பந்ததாரர் தரப்பில் நூலகத்தின் கட்டுமான பணி வேகமாக நடைபெற்றுவரும் நிலையில், அந்த கட்டிடத்தில் திருஷ்டி படம் ஒன்று மாட்டி வைக்கப்பட்டுள்ளது பற்றி செய்தி தளங்கள் மற்றும் சமூக ஊடகங்களில் விமர்சனம் கிளம்பியது.
மூடநம்பிக்கைக்கு எதிராக குரல் கொடுத்த தந்தை பெரியார் பெயரில் உருவாகும் நூலகத்தில் திருஷ்டி படமா என பேச்சுக்கள் எழுந்தன. இது பற்றி அமைச்சரிடம் செய்தியாளர்கள் கேட்டதற்கு அவர், இந்த கட்டிடத்தை கட்டிவரும் ஒப்பந்ததாரரின் நம்பிகையில் அவ்வாறு திருஷ்டி படம் வைக்கப்பட்டிருக்கிறது. பணிகள் நிறைவு பெற்று அரசிடம் வழங்கப்படும் பொது இதுபோன்ற எந்த பலகைகளும் இருக்காது என கூறியிருந்தார்.
இந்த நிலையில் அந்த படம் இன்று மாலையே அகற்றப்பட்டதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.