பருவ கால காய்ச்சல் பாதிப்புகள் கடந்த இரண்டு வாரங்களாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கண்டறியப்பட்டு, அதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுவருகிறது. 

கோவை மாநகராட்சியின் 70 இடங்களிலும், ஊரக பகுதியின் 168 இடங்களிலும் ஆக மொத்தம் 238 இடங்களிலும் மருத்துவ முகாம்கள் நடைபெற்றுவருகிறது. இந்த முகாம்கள் மூலம் கோவையில் 1000 பேருக்கு காய்ச்சல் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது.
 

மாநகராட்சியின் 70 இடங்களில் நடைபெற்ற முகாம் மூலமாக 251 பேருக்கு காய்ச்சல் பாதிப்பு உள்ளதாகவும், அதில் 91 பேருக்கு தீவிர பாதிப்பு இருப்பதால், அவர்களுக்கு தேவையான மருத்துவ உதவி வழங்கி, அவர்களை தனிமை படுத்திக்கொள்ளவும் அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. 

காய்ச்சல் பாதிப்பு கோவையில் நிலவுவதால் மாநகராட்சியில் தினமும் மருத்துவ முகாம் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மாநகரில் தினமும் 10 பள்ளிகளுக்கு சென்று மருத்துவ குழுவினர்  பரிசோதனை செய்யவும் உள்ளனர். அத்துடன் ஃப்ளு காய்ச்சல் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.  கிராம புற பள்ளிகளில் மருத்துவ பரிசோதனை நடத்த 24 தனி குழுக்கள் அமைக்கபட்டுள்ளது.

இதற்கு நடுவே பன்றி காய்ச்சல் பாதிப்பும் உள்ளது! 


கோவை மாவட்டத்தில் தினசரி 20க்கும் மேற்பட்டோருக்கு காய்ச்சல் பாதிப்பு பதிவு செய்யப்படுகிறது. இதில் சராசரியாக 2 பேருக்கு பன்றி காய்ச்சல் உறுதி செய்யப்படுகிறது என சுகாதாரத் துறை துணை இயக்குநர் பி.அருணா தெரிவித்தார். 

பன்றி காய்ச்சல் பாதிப்பு தொடர்பாக பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குறித்து அரசு, தனியார் மருத்துவமனைகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.  காய்ச்சல், சளி, தொண்டை வலி, இருமல், வாந்தி போன்றவை  இதன் முக்கிய அறிகுறிகளாகும்.

தீவிர பாதிப்பின்போது மூச்சுத்திணறல் ஏற்படுவதற்கும் வாய்ப்புள்ளது. எனவே குழந்தைகள் உள்ளிட்ட அனைவருக்கும் காய்ச்சல், சளி, தொண்டை வலி போன்ற அறிகுறிகள் இருந்தால் அருகிலுள்ள அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை எடுத்துகொள்ளவேண்டும். குறிப்பாக குழந்தைகளிடையே மேற்கொண்ட அறிகுறிகள் இருந்தால் தாமதிக்காமல் உடனடியாக சிகிச்சை அளிக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.