கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்தில் இன்று மக்கும் மற்றும் மக்கா குப்பைகளை வகைப்படுத்தி பிரிப்பதற்கான இருவகை பிளாஸ்டிக் 176 புதிய குப்பைத் தொட்டிகளுடன் கூடிய 44 தள்ளுவண்டிகளை மத்திய மண்டலத்தின் 20 வார்டுகளுக்குட்பட்ட தூய்மைப் பணியாளர்களுக்கு கோவை மேயர் கல்பனா ஆனந்தகுமார், மாநகராட்சி ஆணையாளர் மு.பிரதாப் ஆகியோர் வழங்கினார்கள்.

தரம்பிரித்து வழங்கப்படும் குப்பைகளை மாநகராட்சி சார்பில் உரமாக்க நடவடிக்கைகள் எடுக்கபட்டு வருகிறது. தொடர்ச்சியாக கோவை மாநகராட்சி ஆணையர் பிரதாப், மாநகராட்சியின் வெவ்வேறு வார்டுகளில் குப்பைகளை சேகரிக்க செல்லும் தூய்மை பணியாளர்களிடம் நேரடியாகவே சென்று குப்பைகளை மக்கும் குப்பை, மக்காத குப்பை என பொதுமக்களிடம் தரம் பிரித்து தங்களிடம் ஒப்படைக்க கேட்டுக்கொள்ளும்படி அறிவுறுத்திவருகிறார்.

 

இருந்த போதும், பல நேரங்களில் குப்பைகளை பொது மக்கள் தரம் பிரித்து தூய்மை பணியாளர்களிடம் வழங்குவது இல்லை. 

 

100% மக்கக்கூடிய குப்பைகளை மட்டும் தான் உரம் தயாரிக்கும் மையத்திற்கு அனுப்ப வேண்டும் என்ற விதி இருக்கும் நிலையில் இந்த ஆண்டு பிப்ரவரி வரை கோவை மாநகராட்சியால் வெள்ளலூர் உரம் தயாரிக்கும் மையத்திற்கு அனுப்பிவைக்க பட்ட 14,000 டன் குப்பைகளில் வெறும் 22% மட்டுமே மக்கும் மற்றும் மக்கா குப்பைகளாக வகைப்படுத்தி பிரித்து அனுப்பப்பட்டுள்ளதாக தி இந்து நாளிதழ் அதன் சமீபத்திய கட்டுரையில் கூறியுள்ளது. 

 

இவ்வாறு மக்கும் குப்பையுடன் மக்காத குப்பை கலவையாக சேர்ந்து உரமாக்க படுவதால் அதில் பிளாஸ்டிக் மற்றும் கண்ணாடி துகள்களும் உள்ளது, எனவே இதை வாங்க விவசாயிகள் மறுக்கின்றனர்.

 

என்னதான் மாநகராட்சி குப்பைகளை கையாள புதுமுயற்சிகள் எடுத்தாலும் பொதுமக்கள் மற்றும் தூய்மை பணியாளர்கள் பலரிடமும்  இதுபற்றிய விழிப்புணர்வு இல்லை என்பது தெரியவருகிறது.