ஏப்ரல் முதல் தேதியிலிருந்து ஆறு இலக்க 'ஹால்மார்க் எண்கள்' இல்லாத புதிய தங்க நகைகளை விற்பனை செய்ய மத்திய அரசு தடை விதித்துள்ளது.

அதே போல் ஹால்மார்க் முத்திரையில்லாத பழைய தங்க நகைகளையும் முன்பு போல் நினைத்தவுடன் விற்றுவிட முடியாது. எக்ஸ்சேஞ்ச் செய்ய முடியாது. அதற்கு விதிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளன. 

பி.ஐ.எஸ்., எனும் இந்திய தர நிர்ணய கழகம், தங்கத்தின் உயர்ந்த தரம் மற்றும் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் தங்க நகைகள் மற்றும் தங்கத்திலான கலைப் பொருட்களுக்கு ஹால்மார்க் தனித்துவ அடையாள எண் முறையை அறிமுகம் செய்துள்ளது.

இது ஒவ்வொரு நகைக்கும் பிரத்யேக குறியீட்டைக் கொண்டிருக்கும். அவை எண்கள் மற்றும் எழுத்துக்கள் கலந்து இருக்கும்.

இந்த நடைமுறை ஏப்ரல் முதல் கட்டாயமாகியுள்ளது. பி.ஐ.எஸ்., பதிவு பெற்ற நகை உற்பத்தியாளர்கள், விற்பனையாளர்கள் இந்த தனித்துவ அடையாள எண் இன்றி விற்பனை செய்தால், அவர்களின் பதிவு ரத்து செய்யப்படும்.

2 கிராமுக்குக் குறைவான நகைகளுக்கு இந்த முத்திரை பதிப்பதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

ஹால்மார்க்கை உறுதி செய்வது எப்படி?

நாம் வாங்கும் தங்க நகையில் இருக்கும் ஹால்மார்க்கை உறுதி செய்ய BIS care செயலி, இந்திய தர நிர்ணய கழகத்தால் வெளியிடப்பட்டுள்ளது.

 அதனை பதிவிறக்கி அதில் நீங்கள் வாங்க உள்ள நகையின் 6 இலக்க ஹால்மார்க் எண்ணை தந்தால், எந்த கடை, ஹால்மார்க் முத்திரை வழங்கிய மையத்தின் பெயர், நகைகடையின் பதிவு எண், எந்த தேதியில் ஹால்மார்க் வழங்கப்பட்டது, அணிகலன்களின் பெயர், நகையின் தரம் போன்ற மொத்த விவரமும் தெரிந்துவிடும்.


பழைய நகையை விற்கவும் ஹால்மார்க் தேவை


எப்படி புதிய நகைகளை விற்க ஹால்மார்க் கட்டாயமோ, அதே போல் உங்களது ஹால்மார்க் முத்திரையில்லாத பழைய நகையை விற்கவோ, எக்ஸ்சேஞ்ச் செய்யவோ ஹால்மார்க் சான்று பெறுவது கட்டாயம் ஆகும். இதனை இந்திய தர நிர்ணய கழகம் கட்டாயமாக்கியுள்ளது.

 இது வாடிக்கையாளர்களுக்கு அசெளகரியத்தை தரும். பழைய தங்கத்தின் விலையை குறைத்து வாங்கவும் வழி வகுக்கும் என்கின்றனர்.

பழைய நகைக்கு ஹால்மார்க் பெறுவது எப்படி?

ஹால்மார்க் என்பது தங்கத்தின் தூய்மை 22 கேரட் அல்லது 18 கேரட் இருக்கிறதா என்பதை உறுதிப்படுத்துவதாகவும். உங்கள் பழைய நகையை பி.ஐ.எஸ்., பதிவு பெற்ற நகைக் கடைக்காரரிடம் தந்து தூய்மையைப் பொறுத்து 22 கேரட் அல்லது 18 கேரட்டிற்கு உண்டான ஹால்மார்க்கை பெற்று தருவார்.

 இதற்காக ஒரு நகைக்கு ரூ.45 கட்டணம் பெறப்படும். ஹால்மார்க் சான்று பெற்ற பின்னர் அதனை விற்றுக்கொள்ளலாம்.

இல்லை எனில் பி.ஐ.எஸ்., அங்கீகாரம் பெற்ற ஹால்மார்க் முத்திரையிடும் மையத்திற்கு சென்று நகைகளை நீங்களே பரிசோதித்துக்கொள்ளலாம். இங்கு நான்கு நகைகளுக்கு குறைந்தபட்ச கட்டணம் ரூ.200 வசூலிக்கப்படும்.