ஈஷா மீது நிலுவையில் உள்ள வழக்குகள் என்ன என்பதை ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்ற ஆணையின் கீழ் நேற்று ஈஷா யோக மையத்தில் சமூகநலப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள், குழந்தைகள் நல அதிகாரிகள், காவல்துறை உள்ளிட்டோர் ஆய்வு செய்தனர். நேற்று காலை  தொடங்கிய சோதனை இரவு வரை நடைபெற்றது. இந்நிலையில் இரண்டாவது நாளாக இன்றும் அதிகாரிகள் ஈஷா மையத்தில் ஆய்வு நடத்தி வருகின்றனர். 

கோவை வடவள்ளி பகுதியை சேர்ந்த காமராஜ் என்பவர் தனது 2 மகள்கள் மூளை சலவை செய்யப்பட்டு ஈஷா மையத்தில் தங்கவைக்கப்பட்டுள்ளனர் எனவும்  இதுபோன்ற நடவடிக்கைகளில் ஈஷா மையத்தினர் ஈடுபடுகின்றனர், பிள்ளைகளை மூளைச்சலவை செய்து அங்கேயே துறவியாக இருக்க வைத்து விடுகின்றனர், குடும்பத்தினரிடம் பேச விடுவதில்லை என கூறி, தனது மகள்களை மீட்டுத்தர வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனுத் தாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்கில், நீதிபதிகள் தமிழக அரசை விசாரிக்க உத்தரவிட்டனர். மேலும் ஈஷா மீது மனுதாரர் பல்வேறு குற்றச்சாட்டுகளை அடுக்கியிருந்தார். அது குறித்தும் விசாரித்து மிக விரைவில் அறிக்கை சமர்ப்பிக்க ஆணையிட்டனர். இதனடிப்படையில் விசாரணை நடைபெற்று வருகிறது. இன்று இரண்டாம் நாளாக தொடருகிறது.

இந்நிலையில், இது பற்றி கருத்து தெரிவித்துள்ள ஈஷா, மனுதாரர் வைத்துள்ள அனைத்து குற்றச்சாட்டுகளும் பொய்யானவை என கூறியுள்ளது.

Updated: 2.10.2024