வெள்ளலூர் குப்பைக்கிடங்கில் வருடக்கணக்காக கொட்டி வைக்கப்பட்டுள்ள குப்பைகளால் நிலத்தடி நீர் பெருமளவு மாசடைந்துள்ளது. அங்கு மட்டும் பாதிப்பு நிற்காமல் சுற்று பகுதிகளிலும் பாதிப்பு பரவி வருகிறது.

ஏற்கனவே வெள்ளலூர் பகுதி, கோணவாய்க்கால்பாளையம், கோவை மஹாலிங்கபுரம் ஆகிய இடங்களில் போர்வெல் மூலம் வரும் நீர் மாசு படிந்து மஞ்சள் நீர் போல குழாய்களில் வந்துகொண்டிருந்தது. அத்துடன் கடந்த ஆண்டு அக்டோபர் மாதத்தில் கூடுதலாக போத்தனூர் - சேரன் நகர் பகுதி அருகே உள்ள ஸ்ரீ ராம் நகரின் ஒரு பகுதியில் போர்வெல் நீர் இதே போல மஞ்சளாக வந்தது.

இந்த சம்பவம் குறித்து ஸ்ரீ ராம் நகர் குடியிருப்போர் நல்வாழ்வு சங்கம் சார்பில் புகார் தெரிவிக்கப்பட்டதை அடுத்து அந்த பகுதியில், மாசு கட்டுப்பாடு வாரியத்தின் துணை பொறியாளர் மற்றும் குழுவினர் நேரில் வந்து ஆய்வு செய்து, நீரின் மாதிரிகளை மேற்படி ஆய்வுக்கு எடுத்து சென்றனர். இது கோவை முழுவதும் பரவலாக பேசப்பட்டது.

இந்நிலையில், கடந்த சில நாட்களாக இந்த பகுதியில் வரக்கூடிய போர்வெல் நீரில் காணப்படும் மஞ்சள் நிறம் மிகவும் அதிகரித்து காணப்படுகிறது என அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.

நீரில் மாசு அதிகரித்துள்ளதால் இப்படி இருக்கும் என கணிக்கப்படும் நிலையில், சென்ற வாரம் கோவை மாநகராட்சியின் தெற்கு மண்டல ஆணையர் இதுபற்றி ஆய்வு செய்துள்ளார். இது தொடர்பாக மாசுக்கட்டுப்பாடு வாரியத்திலும் புகார் தெரிவித்துள்ளனர் அப்பகுதி மக்கள்.

எப்போது தான் இந்த நிலையில் இருந்து விடிவு வரும் என அவர்கள் காத்துவருகின்றனர். இதுவரை சட்டப்போராட்டம் நடத்தியும், மனித சங்கிலி போராட்டம் நடத்தியும் வந்துள்ள அவர்களுக்கு எப்போது நிதி கிடைக்கும் என்ற நீண்ட கால எதிர்பார்ப்பு நிறைவேறாமல் உள்ளது.