இந்திய மல்யுத்த வீராங்கனைகளிடம் பாலியல் சீண்டல் செய்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ள இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவர் பிரிஜ் பூஷனுக்கு எதிராக டெல்லியில் நடைபெற்று வந்த போராட்டம் மீண்டும் தொடருமென போராடி வரும் வீராங்கனைகளில் ஒருவரான ஒலிம்பிக் பதக்கம் பெற்ற சாக்சி மாலிக் தெரிவித்துள்ளார்.


இதன் முழு விவரம் பின்வருமாறு:-


ஜனவரி 2023ன் முதல் சில நாட்கள் டெல்லியில் பிரபல மல்யுத்த வீரர்கள் தலைமையில் ஒரு போராட்டம் நடைபெற்றது. 

இந்த போராட்டத்தில் பாரதிய ஜனதா கட்சியின் எம்.பி. யும் இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவருமான  பிரிஜ் பூஷன் சரண் சிங் மீது நாட்டின் பிரபல மல்யுத்த வீராங்கனைகளான வினேஷ் போகத், சாக்சி மாலிக் உள்ளிட்ட முக்கிய மல்யுத்த வீராங்கனைகள் பாலியல் குற்றச்சாட்டு சுமத்தி, அவர் பாலியல் சீண்டலில் ஈடுபட்டார் என்பதற்காக அவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கவேண்டும் என கூறி தர்ணா செய்தனர். 

ஜனவரியில் பிரிஜ் பூஷன் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் கூறியதை அடுத்து போராட்டம் தற்காலிகமாக ஓய்வுக்கு வந்தது. 

ஆனால் அதன் பின்னர் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாததால் ஏப்ரல் மாதத்தில் டெல்லியின் ஜந்தர் மந்தர் பகுதியில் மல்யுத்த வீராங்கனைகள் மீண்டும் தர்ணாவில் ஈடுபட்டனர்.  போட்டிக்கு தயாராகும் போது தவறான முறையில் பிரிஜ் பூஷன் தங்களை பலமுறை தொட்டு பேசியுள்ளதாக 2 வீராங்கனைகள் காவல் துறையில் வழக்கும் பதிவு செய்திருந்தனர்.  

இவர்களின் போராட்டத்தை கண்ட உச்ச நீதிமன்றம் இதில் தலையிட்டது. இதன் விளைவாக பிரிஜ் பூஷன் மீது 2 எப்.ஐ.ஆர். பதிவு செய்யப்பட்டது. ஆனால் விசாரணை ஆமைவேகத்தில் நடைபெற்றுவருகிறது என விமர்சனங்கள் எழுந்தன. பிரிஜ் பூஷனுக்கு எதிராக ஆதாரங்கள் எதுவும் இல்லை எனவும் டெல்லி போலீஸ் தெரிவித்தது.

இந்நிலையில் இந்தியாவை உலக அரங்களில் தலைநிமிர வைத்த மல்யுத்த வீரர்களான சுமித் மாலிக், பஜ்ரங் புனியா போன்றவர்கள் இம்முறை இந்த போராட்டத்தில் சகா மல்யுத்த வீராங்கனைகளுக்கு ஆதராவாக களம் இறங்கினர். 

இருந்த போதிலும் பிரிஜ் பூஷன் இவர்களை மிரட்டும் தொனியில் பேசிவருகிறார். 

கடந்த ஞாயிறு புது பாராளுமன்ற கட்டிட திறப்பின் போது அதை நோக்கி நீதி கேட்டு நடைபயணம் சென்ற மல்யுத்த வீரர், வீராங்கனைகள் தடுத்து நிறுத்தப்பட்டு கைது செய்யப்பட்டனர்.


அத்துடன் அவர்கள் இனி ஜந்தர் மந்தரில் போராட முடியாத படி டெல்லி போலீஸ் தடை விதித்தது. 

கடந்த ஒலிம்பிக் போட்டியில் ஈட்டி எறிதல் நிகழ்வில் தங்கம் வென்ற நீரஜ் சோப்ரா மற்றும் 2008 ஒலிம்பிக் போட்டியில் தனிநபர் பிரிவில் முதல் முறையாக தங்கம் வென்ற அபினவ் பிந்த்ரா ஆகியோர்மல்யுத்த வீரர்கள் மற்றும் வீராங்கனைகளுக்கு ஆதரவாக குரல் கொடுத்துள்ளனர். 

இந்நிலையில் தான் சாக்சி மாலிக் நேற்று (29.5.23) இரவு 8.40க்கு போராட்டம் மீண்டும் தொடரும் என பேசி வீடியோவை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டிருந்தார்.

விரைவில் இந்த போராட்டம் மீண்டும் துவங்கும் என தெரிகிறது. பெண் பிள்ளைகளே நம் தேசத்தின் பெருமை என கூறும் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித்ஷா பிரிஜ் பூஷன் பற்றி ஏன் மெளனமாக உள்ளனர் என கேள்விகள் எழுகின்றன.