கோவையில் தொழில்நுட்ப நகரம் மற்றும் செயற்கை நுண்ணறிவு தகவல் தொழில்நுட்ப வளாக திட்டம் தொடர்பாக அமைச்சர் PTR ஆய்வு!
- by David
- Feb 01,2025
கோவையில் தொழில்நுட்ப நகரம் மற்றும் செயற்கை நுண்ணறிவு தகவல் தொழில்நுட்ப வளாக திட்டம் தொடர்பாக அமைச்சர் PTR ஆய்வு!
தமிழக அரசு 2023 பட்ஜெட்டில் கோவையில் அதிநவீன தொழில்நுட்ப நகர திட்டம் கொண்டுவரப்படும் என அறிவித்தது. மொத்தம் 3 நகரங்களில் - சென்னை, கோவை, மற்றும் ஓசூரில் - இந்த அதிநவீன தொழில்நுட்ப நகரங்களை அமைக்க அரசு திட்டமிட்டது. தமிழகத்தை ஐ.டி.துறையில் மேலும் பெரும் வளர்ச்சியை அடைய இந்த திட்டம் உதவும்.
இந்த தொழில்நுட்ப நகரங்களில், ஐ.டி நிறுவனங்களுக்கு தேவையான ஆய்வு-ஆராய்ச்சி கூடம், ஐடி துறை சார்ந்த தொழில்நுட்பங்களை உருவாக்க தேவையான தொழில்நுட்ப வசதிகள் மற்றும் உள்கட்டமைப்புகள், தங்கும் இடங்கள், வணிகத்திற்கான இடங்கள், அலுவலகத்திற்கான இடங்கள், பொழுதுபோக்குக்கான அம்சங்கள், தடையற்ற மின்சாரம் மற்றும் குடிநீர் என அனைத்து வசதிகளுடன் அமைக்க திட்டம் உள்ளதாகவும், இந்த தொழில்நுட்ப நகர திட்டங்களை அரசு மற்றும் தனியார் கூட்டு முயற்சியில் கொண்டு வரவும் திட்டமிடப்பட்டுள்ளது.
முன்னதாக இந்த திட்டம் கோவையில் சோமயம்பாளையம் பகுதியில் 321 ஏக்கர் நிலத்தில் அமைக்க திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் இந்த பகுதி யானை - மனித மோதல்கள் அதிகம் ஏற்படும் இடமாக இருப்பதால் இத்திட்டத்திற்கு முன்னர் கோரப்பட்ட டெண்டரை தமிழக அரசின் எல்காட் நிறுவனம் ரத்து செய்துள்ளது. எனவே இந்த திட்டத்திற்கான மாற்று இடங்களை ஆராய அரசு முயற்சிகள் எடுத்துவருகிறது.
இந்நிலையில் கோவையில் இந்த திட்டத்தை செயல்படுத்துவதற்கான சாத்தியம் உள்ள இடங்களை அரசு ஆராய்ந்து வருகிறது எனவும் இது தொடர்பாக தமிழக தகவல் துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கோவை பாரதியார் பல்கலையில் உயர்மட்ட குழுவுடன் ஆலோசனை நடத்தியதாகவும் இன்று அறிவித்தார்.
அதேபோல சென்னையில் Umagine TN 2025 எனும் தகவல் தொழில்நுட்ப உச்சி மாநாட்டில் முதலமைச்சர் ஸ்டாலின் கோவையில் அரசு தனியார் கூட்டுமுயற்சி அடிப்படையில் ஏ.ஐ. எனும் செயற்கை நுண்ணறிவு பிரிவில் தகவல் தொழில்நுட்ப வளாகம் 2 மில்லியன் சதுரடியில் உருவாகும் என அறிவித்த திட்டத்திற்காக கோவை விளாங்குறிச்சி பகுதியில் அவர் ஆய்வு நடத்தினார்.