கோவை விமான நிலையத்தின் பல்வேறு தேவைகள் குறித்து அரசின் கவனத்திற்கு எடுத்து செல்ல முயற்சி!
- by CC Web Desk
- May 07,2025
கோவை சர்வதேச விமான நிலையத்தை விரிவாக்கம் செய்ய தேவையான நிலத்தை தமிழ்நாடு அரசு கையகப்படுத்தி மத்திய அரசிடம் வழங்கிய நிலையில், இந்திய விமான நிலைய ஆணையம் சார்பில் கையக படுத்தப்பட்ட பகுதிக்கு சுற்றுச்சுவர் அமைக்கவும், விமான நிலையத்தின் விரிவாக்கத்திற்கு ஏற்ப புது வாகனங்கள் நிறுத்துமிடம் அமைப்பதற்கான டெண்டர்களும் கோரப்பட்டு உள்ளன.
படிப்படியாக விரிவாக்கம் தொடர்பான பணிகள் நடக்கிறது. 2031ம் ஆண்டுக்குள் விமான நிலையத்தை விரிவாக்கம் செய்து முடிக்க இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
இந்த நிலையில் இந்த காலத்திற்கு நடுவே கோவை விமான நிலையத்திற்கு தேவைப்படும் கட்டமைப்புகளை அடையாளம் கண்டு, அதுகுறித்து மத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சரின் கவனத்திற்கு எடுத்து செல்லும் நோக்கில் அதற்கான செயற்குழு ஒன்றை அமைப்பது தொடர்பாக கோவை மண்டலத்தின் இந்திய தொழில் கூட்டமைப்பு (CII) சமீபத்தில் முக்கிய கூட்டம் ஒன்றை நடத்தியிருக்கிறது.
இதில் கோவை மண்டலத்தை சேர்ந்த முக்கிய தொழில் துறையினர் மற்றும் கோவை மாவட்ட கலெக்டர் பங்கேற்றனர். இந்த முயற்சியால், கோவை விமான நிலையத்தின் பல்வேறு தேவைகள் குறித்து அரசின் கவனத்திற்கு எடுத்து செல்லப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.