கோவை கவுண்டர் மில்ஸ் பகுதியில் இயங்கி வரும் கொங்குநாடு கலை அறிவியல் கல்லூரியில் அண்மையில்  தேனீ பட்டயப்படிப்பு முடித்த வே.ஜினோ என்பவர் 2023க்கான தேசிய அளவில் சிறந்த தேனீ வளர்ப்பாளர் விருதை பெற்றுள்ளார்.


இதுகுறித்த விவரம் பின்வருமாறு:-

ஒவ்வொரு வருடமும் மே 20ம் தேதியன்று தேசிய தேனீ வாரியம் மூலம் சர்வதேச தேனீ தினம் கொண்டாடப்படுகிறது. அந்தவகையில், இந்த ஆண்டு மத்தியபிரதேச மாநிலம் வாரசோனி வேளாண் கல்லூரியில் சர்வதேச தேனீ தினம் பிரமாண்டமாக கொண்டாடப்பட்டது.


இதில், ஒரு பகுதியாக தமிழ்நாடு தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை பரிந்துரையின் மூலம் சிறந்த தேனீ வளர்ப்போர் மற்றும் சிறந்த தேனீ வளர்ப்போர் சங்கம் என இரண்டு பிரிவுகளில் தேசிய அளவிலான விருது மத்திய வேளாண் மந்திரியால் உலக தேனீக்கள் தினத்தை முன்னிட்டு வழங்கப்பட்டது. 

 

இந்த விருது வழங்கும் விழாவில், கன்னியாகுமரி மாவட்டத்தை சார்ந்த 'ஜி ஹனி' நிறுவனத்தின் உரிமையாளர் வே.ஜினோ அவர்களுக்கு தேசிய அளவில் சிறந்த தேனீ வளர்ப்பாளர் விருது மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது.


வே.ஜினோ, கோவை கொங்குநாடு கலை அறிவியல் கல்லூரியில் தேனீ பட்டயப்படிப்பு பயின்றவர். இந்த பட்டயபடிப்பை இக்கல்லூரியின் விலங்கியல் துறை  கடந்த 2018 முதல் வழங்கிவருகிறது. இந்த பட்டயபடிப்பை படிக்க 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றால் போதும். 1 ஆண்டு கால படமான இது பேராசிரியர் ராஜேஷ் அவர்களின் மேற்பார்வையில் வழங்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. 

இந்த விருது மற்றும் சான்றிதழ் உடன் ஜினோ, சென்னை தலைமைச் செயலகத்தில் வேளாண்மை-உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வத்தை நேற்று சந்தித்து வாழ்த்து பெற்றார்.