கோவை அரசூரில் உள்ள கே.பி.ஆர். பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் 2024-2028 கல்வியாண்டில் தங்கள் உயர்கல்வியை துவங்கும் 6 பொறியியல் துறை மாணவர்களுக்கான வரவேற்பு நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. கல்லூரியில் உள்ள 12 துறைகளில் 6 துறைகளுக்கான வகுப்புகளும் இன்று தொடங்கின. 

இன்செப்ஷன் ‘24 என்ற பெயரில் இரண்டு நாள் நடைபெற்ற இந்த தொடக்க நிகழ்ச்சியின் முதல் நாள் நிகழ்வுகள் கே.பி.ஆர். குழுமத்தின் தலைவர் கே.பி.ராமசாமி தலைமையில் நடைபெற்றது.

இதில் கார்கில் நிறுவனத்தின் சர்வதேச மனிதவள தலைவர் வி நடராஜ பெருமாள் சிறப்பு விருந்தினராகவும் ஆரக்கல் நிறுவனத்தின் துணை தலைவர் பாலாஜி துரைசாமி மற்றும் கௌரவ விருந்தினராகவும் பங்கேற்று   குத்து விளக்கேற்றி நிகழ்ச்சியை தொடங்கி வைத்தனர்.

விழாவில் நடராஜ பெருமாள் பேசுகையில், கார்ப்ரேட் நிறுவனங்களின் பார்வையில் கேபிஆர் பொறியியல் கல்லூரி பற்றியும் நேர்முகத்தேர்வில் பொறியாளர்களிடம் நிறுவனங்களின் எதிர்பார்ப்புகள் பற்றியும் பகிர்ந்துகொண்டார். மேலும் நாள்தோறும் புதிதாக ஒன்றை கற்க விரும்புமாறு வலியுறுத்தினார்.

பாலாஜி துரைசாமி பேசுகையில், “பல்வேறு துறைகளில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பங்கள் ஆதிக்கம் செலுத்தினாலும் பொறியியலுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது. பொறியாளர்கள் தான் உலகை மாற்றும் பல்வேறு புதுமைகளை உருவாக்குகின்றனர்” என்று கூறினார்.

கே.பி.ஆர். குழுமத்தின் தலைவர் கே.பி.ராமசாமி பேசுகையில், அடுத்துவரும் நான்கு ஆண்டுகளில் மாணவர்களை அதிகாரிகளாகவும் தொழில் முனைவோர்களாகவும் மாற்ற வேண்டும் என்பதே கல்லூரியின் இலக்கு என்று கூறி மாணவர்களை வாழ்த்தினார்.

முதலாவதாக பேசிய கல்லூரி முதல்வர் த.சரவணன், இந்த வருடம் பல்வேறு புதுமையான திட்டங்களையும் செயல்பாடுகளையும் மாணவர் மேம்பாட்டுக்காக அறிமுகப்படுத்தியுள்ளதாக பேசினார். மேலும் தொடக்க விழாவை தொடர்ந்து கல்லூரியின் பல்வேறு துறைகள் மற்றும் கிளப்களின் செயல்பாடுகளை மையமாக கொண்டு இரண்டு வார  பயிற்சி முகாம் நடத்தப்படும் என்று அவர் குறிப்பிட்டார்.

நிகழ்ச்சியின் முக்கிய அம்சமாக அனைவரின் கவனத்தை ஈர்க்கும் வகையில் பெற்றோர்கள், மாணவர்கள், பேராசிரியர்கள் மற்றும் சிறப்பு விருந்தினர் என அனைவரையும் கல்லூரி மாணவர்கள் உருவாக்கிய மனித ரோபோ வரவேற்றது.