அவிநாசி சாலையில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் நோக்கில் இந்த சாலையின் ஒரு பகுதியான உப்பிலிபாளையம் சிக்னல் முதல் மற்றொரு பகுதியான கோல்டுவின்ஸ் வரை 10.1 கிலோமீட்டர் தொலைவுக்கு கட்டப்பட்டு வரும் உயர்மட்ட மேம்பால பணிகள் தற்போது வரை 93% நிறைவு பெற்றுள்ளது. 

இந்த திட்டத்தில் மேபலத்திற்கான தூண்கள் மொத்தம் 305 அமைக்கப்படவேண்டும். அவை அனைத்தும் நிறுவப்பட்டுள்ளது. மேலும் மேம்பாலத்தின் முக்கிய அங்கமான பிரதான மேற்பரப்பு தளத்தை அமைக்க டெக் ஸ்லாப் மொத்தம் 304 அமைத்திட வேண்டும். இதில் 301 டெக் ஸ்லாப்கள் பொருத்தப்பட்டுள்ளன. 

உப்பிலிபாளையம் சிக்னல் பகுதியில் கட்டப்பட்ட பிரதான ஏறு/இறங்கு தளம் மற்றும் கோல்டுவின்ஸ் பகுதியில் உள்ள பிரதான ஏறு/இறங்கு தளம் முடிவுபெறும் நிலையில் உள்ளது. மீதம் அண்ணா சிலை, நவ இந்தியா,ஹோப்ஸ் காலேஜ் மற்றும் சிட்ரா ஆகிய இடங்கள் அருகே வரக்கூடிய ஏறு/இறங்கு தளங்களில் பணிகள் வேகமாக நடந்து வருகிறது.

அவிநாசி சாலை உயர்மட்ட மேம்பால திட்டப்பணியில் உப்பிலிபாளையம் சிக்னல் முதல் கோல்டுவின்ஸ் வரை பில்லர் எளிதாக அமைக்கப்பட்டுள்ளது. ஆனால் ஹோப்ஸ் சாலை பகுதியில் ரயில்வே பாலம் ஏற்கனவே இருப்பதால், அங்கு தூண்களை நிறுவுவது சாத்தியமில்லை. எனவே தற்போது அந்த ரயில்வே பாலத்தின் ஆரம்ப மற்றும் முடிவு பகுதியின் அருகே அமைக்கப்பட்டுள்ள தூண்களின் இடையே உள்ள 52 மீட்டர் இடைவெளியைக் இணைக்க இரும்பு பாலம் பொருத்தப்பட உள்ளது.

இதற்கான கட்டமைப்புகள் தயார் நிலையில் உள்ளது. இது மொத்தம் 900 டன் எடை கொண்ட இரும்பு பாலம் என்பதால் இதை 40 பகுதிகளாக பிரித்து, அதை 15 ட்ரக்குகளில் ஹைதராபாத்தில் இருந்து கோவைக்கு அனுப்ப திட்டமிடப்பட்டுள்ளது. இது 1 வாரத்தில் கோவைக்கு எடுத்து வரப்படும்.

இது ஹோப்ஸ் பகுதியில் உள்ள 52 மீட்டர் இடைவெளியை இணைக்க பயன்படுத்தப்படும். இதற்கான ஒப்புதல் சேலம் ரயில்வே கோட்டம் வழங்கியுள்ளது. இறுதி ஒப்புதலை தென்னக ரயில்வே-யின் தலைமையகத்திடம் இருந்து பெற நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

அந்த இரும்பு பாலம் மொத்தமாக கோவை வந்து, ஒப்புதல் கிடைத்ததும் 10-15 நாட்களில் பொருத்தி முடிக்கப்படும். இந்த மேம்பால திட்டத்தில் மிக முக்கியமானதாக கருதப்படும் இந்த பணி நடைபெறும் போது இந்த பாலத்தின் கீழ் பகுதியில் ரயில்கள் செல்லாது. 

2020ல் துவங்கிய இந்த மேம்பால திட்டம் அடுத்த 4 மாதங்களில் முழுவதுமாக முடிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கு அடுத்து கோல்ட்வினஸ் பகுதியில் இந்த பாலம் முடியும் இடத்தில் இருந்து சிறு இடைவெளி விட்டு அந்த பகுதி முதல் நீலாம்பூர் வரையிலான 2 அடுக்கு பாலம் கட்டும் பணி துவங்க வாய்ப்புள்ளது.