கோவையில் நேற்று  கிக்கானி மேல்நிலைப்பள்ளியில் பள்ளிக் கல்வித் துறையின் சார்பில் கலைத்திருவிழா  நடைபெற்றது. 


மாவட்ட அளவில் நடைபெற்ற கலைத் திருவிழா போட்டிகளில் 400க்கும் மேற்பட்ட பள்ளிகளை சார்ந்த மாணவ மாணவியர் கலந்து கொண்டனர். 


இதில் பேச்சுப்போட்டி, கதை எழுதுதல், கட்டுரை போட்டி, திருக்குறள் ஒப்புவித்தல், ஓவியம், தனி நடனம், குழு நடன,ம் நாட்டுப்புற நடனம் உட்பட பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டது. 


இதில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு மாவட்ட ஆட்சியர் சமீரன் பரிசுகளை வழங்கி பாராட்டினார். இந்நிகழ்ச்சியில் தொண்டாமுத்தூர் வட்டாரம் புதூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் 7ம்வகுப்பு பயிலும் இரண்டு கைகள் மற்றும் இரண்டு கால்கள் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளி மாணவன் நிர்மல் குமார் நடனம் ஆடியது அனைவரையும் கவர்ந்தது. 


நிர்மல் குமாரின் நடனத்தையும் தன்னம்பிக்கையையும் பாராட்டி மாவட்ட ஆட்சியர் சமீரன் நிர்மல்குமாரை கட்டி தழுவி சான்றிதழ் வழங்கி அவரது பேனாவை பரிசாக வழங்கி ஊக்குவித்தார். தற்பொழுது நம்மாணவனின் நடனம் சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு பாராட்டுகளை குவித்து வருகிறது.