உப்பிலிபாளையம் சிக்னல் முதல் கோல்ட் வின்ஸ வரை 10.1 கிலோமீட்டருக்கு உருவாகி வரும் அவிநாசி சாலை மேம்பாலம் 2025 ஜூன் மாதத்திற்குள் முடிக்க திட்டமிடப்பட்டு பணிகள் நடைபெற்றுவருகிறது. 2024 இறுதியில் கோவைக்கு வருகை தந்த தமிழக முதலமைச்சர் இந்த மேம்பாலம் கோல்ட்வின்ஸ முதல் நீலாம்பூர் வரை சுமார் ரூ.600 கோடி மதிப்பில் 5 கிலோமீட்டருக்கு நீட்டிக்கப்படும் என்றார்.

இன்று கோவையில் உருவாகி வரும் பெரியார் நூலகத்தை ஆய்வு செய்ய பொதுப்பணி துறை அமைச்சர் எ.வ.வேலு செய்தியாளர் சந்திப்பில் பேசுகையில், அவிநாசி சாலை மேம்பால நீட்டிப்பு குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு அவர், நீட்டிப்புக்கான திட்ட மதிப்பீடு தயார் செய்யப்பட்டு உள்ளது எனவும்,  இப்போது அது நிதித்துறைக்கு சென்று இருக்கிறது. அங்கு ஒப்புதல் கொடுத்த பின்னர் முதலமைச்சர் ஒப்புதல் பெற்று,  டெண்டர் விடப்படும். இந்த நிதியாண்டிலேயே அந்த பணிகளை ஆரம்பித்து சாத்தியம் உள்ளது என கூறினார்.

சாய்பாபா காலனி மேம்பாலம் பற்றி கேட்டபோது,  இந்த மேம்பாலம் முன்னரே கட்டப்பட்டிருக்கவேண்டும் ஆனால் மெட்ரோ வருவதாக இருந்த காரணத்தால் சற்று தாமதமாக திட்டம் ஆரம்பமானது. இருந்தாலும் இந்த மேம்பாலத்தை விரைந்து முடிக்க ஒப்பந்ததாரரிடம் அறிவுறுத்தப்பட்டிருக்கிறதாக அவர் கூறினார். நிர்ணயிக்கப்பட்ட காலத்தில் இந்த மேம்பாலம் கட்டி முடிக்கப்படும் என அவர் கூறினார்.