வடகிழக்கு பருவமழை என்பது தமிழகத்தில் அக்டோபர் முதல் டிசம்பர் மாதம் வரை நல்ல மழைபொழிவை தந்து செல்லும்.

 செப்டம்பர் 5 மற்றும் 6ம் தேதிக்கு பிறகு கோவையில்  கனமழை வாய்ப்பு குறையும், எனவே எதிர்வரும் மழைக்காலத்திற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அப்போது எடுக்கவேண்டும் என்று கூறுகிறார் கோயம்பத்தூர் வெதர்மேன் என்று அழைக்கப்படும் இளம் வானிலை ஆய்வாளர் சந்தோஷ்.


கோவையில் செப்டம்பர் 1ம்  தேதி வியாழக்கிழமை பெய்த கன மழையை நிச்சயம் யாரும் மறந்திருக்க முடியாது. சில மணி நேரங்கள் பெய்த இந்த மழை கோவையின் போக்குவரத்தை ஒட்டுமொத்தமாக ஸ்தம்பித்துப் போக வைத்தது. சில சுரங்கப் பாதைகள், மேம்பாலங்களின் கீழ்ப்பகுதிகள், ரயில் தண்டவாள கீழ்ப்பகுதிகள் மீண்டும் நிரம்பியது, குண்டு குழிகள் இருப்பது தெரியாத அளவிற்கு மழை நீர் அவற்றை மூடி மறைக்க, வாகனங்கள் செல்வது பல இடங்களில் பெரும் சிரமமானது.

இவை அனைத்தும் நிச்சயம் ஏற்படும் என்று ஆகஸ்ட் மாதம் 28ஆம் தேதியே தன்னுடைய சமூக வலைதள பக்கங்களில் குறிப்பிட்டு இருந்தார் கோயம்பத்தூர் வெதர்மேன் சந்தோஷ்.

"செப்டம்பர் 2 தேதி வரை கோவை மக்கள் மிக கவனமாக இருக்க வேண்டும்.  செப்டம்பர் 2ம் தேதி வரை மிக கனமழை பெய்து போக்குவரத்து நெரிசல் ஏற்படவும் சுரங்கப்பாதைகள் நிரம்பும் வாய்ப்பு உள்ளது" என ஆகஸ்ட் மாதம் 28ஆம் தேதியே அவர் தன்னுடைய சமூக வலைதள பக்கங்களை பின் தொடர்வோருக்கு செய்தியாக தெரிவித்திருந்தார்.

இது குறித்து தொலைபேசி மூலம் அவரிடம் கேட்ட பொழுது, அவர்:- 

5 சென்டிமீட்டர் அளவிற்கு மழை பெய்தால் கோவையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட வாய்ப்பு நல்ல  உள்ளது. ஆகஸ்ட் இறுதியில் சில நாட்கள் கனமழை இருந்ததால் வானிலையை ஆய்வு செய்து போக்குவரத்து குறித்தும்  மக்களுக்கு முன்கூட்டியே எச்சரிக்கை விடுத்திருந்ததாக தெரிவித்தார். 

கனமழை அதிகமாக பெய்த செப்டம்பர் 1 தேதி சூலூர் பகுதிகளில் 7 சென்டிமீட்டர் அளவிற்கு மழையும் கோவை மாநகரில் 3 முதல் 4 சென்டிமீட்டர் அளவிற்கு மழையும் பதிவாக இருப்பதாக தெரிவித்தார். மிகக் குறுகிய நேரத்தில் 3 முதல் 4 சென்டிமீட்டர் மழை அன்று பெய்திருப்பதாக அவர் குறிப்பிட்டார்.

ஒரு வருடத்திற்கு மூன்று முதல் நான்கு முறை இப்படி கடும் கனமழை பெய்யும் எனவும் அந்த காலங்களிலும் அதேபோல் பெரும் வானிலை மாற்றத்தினால் மழை பெய்யும் பொழுதும் போக்குவரத்துக் குறித்து முன்னறிவிப்புகளை பதிவிட தான் எண்ணுவதாக அவர் தெரிவித்தார்.

வருகிற அக்டோபர் மற்றும் நவம்பர் மாதம் நல்ல மழை பெய்ய வாய்ப்பு இருப்பதால் அதற்கு நடுவே நமக்கு கிடைத்திருக்கக் கூடிய மூன்று வார காலத்தில் மழைக்கால எச்சரிக்கை   நடவடிக்கைகளை எடுப்பது கனமழை பெய்யும் காலங்களில் பெரும் நீர் தேக்கம் போக்குவரத்து நெரிசல் ஆகியவற்றை குறைக்க உதவும் என்றார்.