கோவை அவிநாசி சாலையில் உப்பிலிபாளையம் சிக்னல் துவங்கி கோல்டுவின்ஸ வரை 10.1 கிலோமீட்டருக்கு உயர்மட்ட மேம்பாலம் அமைக்கப்பட்டு வருகிறது. இந்த மேபாலத்தின் கீழ் பாதசாரிகள் பாதுகாப்பாக சாலைகளை கடக்க 5 இடங்களில் லிப்ட் வசதியுடன் கூடிய நடை மேம்பாலங்கள் அமைக்க நெடுஞ்சாலை துறை திட்டமிட்டு அதற்கான ஆய்வுகளை சென்ற ஆண்டு நடத்தியது.

லட்சுமி மில்ஸ் சந்திப்பு, பீளமேடு, ஹோப்ஸ் பகுதி, கொடிசியா - சி.ஐ.டி. கல்லூரி சந்திப்பு, சிட்ரா - விமான நிலைய சந்திப்பு ஆகிய இடங்களில் இந்த நடைமேம்பாலங்கள் வருவதாக அறிவிக்கப்பட்டது.
எப்போது டிராபிக் சிக்னல்கள் அகற்றப்பட்டு 'யு டர்ன்' முறை கொண்டுவரப்பட்டதோ அப்போது முதலே அவிநாசி சாலையில் பாதசாரிகள் ஒரு பக்கம் இருந்து மறுபக்கம் செல்வது பெரும் சவாலானது. 'யு டர்ன்' அமைப்பு கொண்டுவரப்படுவதால் சிக்னல் இருக்காது, ஆங்காங்கே நிக்காமல் போகலாம், பெட்ரோல் மிச்சமாகும் என்றெல்லாம் சொல்லப்பட்டது. வாகன ஓட்டிகள் நலனுக்காக கொண்டுவரப்பட்ட இந்த அமைப்பு மேல் வாகன ஓட்டிகளுக்கே இருவேறு கருத்துக்கள் உள்ளது.

இந்த நிலையில், சிக்னல் இல்லாததால் பாதசாரிகள் பாதுகாப்பாக சாலையை கடக்க முடியாத சூழல் அவிநாசி சாலையில் உள்ளது. 'யு டர்ன்' அமைக்கப்பட்ட இடத்தில் திரும்பும் வாகனங்களை தவிர மற்ற வாகனங்கள் பிற இடங்களில் பாதசாரிகளை கொஞ்சம் கூட கண்டுகொள்ளாமல் செல்கின்றனர்.  இந்த 'யு டர்ன்' முறையால் வாகனங்கள் நிற்காமல் செல்வதால், பாதசாரிகள, குறிப்பாக வயதானவர்கள் பல நிமிடம் நின்று, அச்சத்துடன் சாலையை கடக்கவேண்டியுள்ளது.

பிரதானமான இடங்களில் வாகனங்கள் திரும்பும் இடங்களில் 'யு டர்ன்' இருந்தாலும் அங்கு தடுப்புகள் வைக்கப்பட்டுள்ளதால், அந்த இடத்தை தாண்டி சற்று தொலைவில் அமைந்துள்ள  'யு டர்ன்' பகுதியில் வாகனங்களை திருப்பவேண்டியதாக உள்ளது. இதனால் பாதசாரிகள் சில அந்த தடுப்பு இருக்கும் இடத்தில் உள்ள சிறு இடைவெளியை பயன்படுத்தி சாலையை கடக்க முயலுகின்றனர். இது அவர்களுக்கும் வாகன ஓட்டிகளுக்கும் ஆபத்தானதாக மாறுகிறது. ( சில நேரங்களில் இந்த இடைவெளியை பயன்படுத்தி வாகன ஓட்டிகளும் சாலையை கடக்க முயலுவதால் விபத்துக்குளாகின்றனர்).

எனவே எப்போது தான் அவிநாசி சாலையின் 5 இடங்களில் நடை மேம்பாலங்கள் வரும் என பாதசாரிகள் எதிர்பார்த்து காத்து வருகின்றனர். இந்த நிலையில் மெட்ரோ ரயில் திட்டம் அவிநாசி சாலையில் வருவதால் சாலையில் வேறு எந்த கட்டுமான பணிகளையும் மேற்கொள்ள வேண்டாம் என சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் நெடுஞ்சாலை துறைக்கு அறிவுறுத்தல் வழங்கியுள்ளது.

அவிநாசி சாலையில் 10 இடங்களில் நவீன வசதிகளுடன் கூடிய நடை மேம்பாலங்கள் விரைவில் நடைபெறவுள்ள உள்ள மெட்ரோ திட்டத்தின் கீழ் அமைக்கப்பட உள்ளதால், நெடுஞ்சாலை துறை சார்பில் நடைமேம்பாலம் இப்போதைக்கு அமைக்கப்படாது. அதே நேரத்தில் இந்த வழித்தடத்தில் மக்கள் சாலையை கடக்க பயன்படுத்தும் 10 இடங்களில் பாதசாரிகள் கடக்குமிடம், வாகனங்களை மெதுவாக இயக்கவேண்டும் என்பதை உணர்த்தும் அறிவிப்பு பலகைகள் வைக்கவும் 'ஜீப்ரா க்ராஸிங்' கருப்பு வெள்ளை குறியீடுகள் வைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளத என தகவல் வெளிவந்துள்ளது. 

 

மெட்ரோ பணிகள் எப்போது துவங்கி, எப்போது அவிநாசி சாலை வழியே நடை மேம்பாலங்களை அந்த நிறுவனம் அமைத்து அதன் பின் மக்கள் பயன்படுத்துவது!!!

 

அதுவரை அவிநாசி சாலை பகுதிகளில் சாலையை கடக்க முயற்சி செய்யும் பாதசாரிகள் மிகவும் கவனத்துடன் சாலையை கடக்க வேண்டும்.