கோவையில் முதன்முதலாக நடைபெற்ற பிரதமர் மோடி அவர்களின் ரோடு ஷோ நிகழ்ச்சி இன்று கோவை அதிரும் அளவிற்கு சிறப்பாக நடைபெற்றது. மாலை 6 மணிக்கு சாய்பாபா காலனி பகுதியில் துவங்கிய பேரணி மாலை 6:40 அளவில் வடகோவை பகுதிக்கு வந்தது.

வழிநெடுக தொண்டர்கள் மற்றும் பொது மக்கள் சூழ்ந்து நின்று பிரதமரை வரவேற்கும் படி முழக்கங்களை எழுப்பியும், பூக்களை தூவியும் வந்தனர்.

சரியாக 7:20 மணிக்கு ஆர்.எஸ். புரத்தில் இந்த பேரணி நிறைவடைந்தது. 

பேரணி நிறைவடைந்த ஆர்.எஸ்.புரம் தபால் நிலையம் பகுதியில் பிரதமர் 1998 ஆம் கோவை குண்டுவெடிப்பு சம்பவத்தில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தி நிகழ்வை நிறைவு செய்தார். 

இந்த ரோடு ஷோ நிகழ்வில் பிரதமர் உடன், பாஜகவின் தேசிய மகளிர் அணி தலைவி மற்றும் கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன், மத்திய இணை அமைச்சர் L.முருகன் மற்றும் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை ஆகியோர் ரோடு ஷோ வாகனத்தில் பயணித்தனர்.

இந்த நிகழ்வு பாஜகவினர் இடையே மிக பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது.

தற்போது சர்கியூட் ஹவுஸ் செல்லும் பிரதமர் இரவு அங்கு தங்கி ஓய்வெடுத்துவிட்டு காலை 9:30 மணிக்கு விமான நிலையம் சென்று அங்கிருந்து ஹெலிகாப்டரில் பாலக்காடு செல்கிறார்.