கோயம்புத்தூர் மாநகராட்சி எல்லைக்குட்பட்ட பொது இடங்கள், அரசு கட்டிடங்கள், சுவர்கள், தெரு விளக்கு கம்பங்கள், சாலை மையதிட்டுகள், பாலங்கள் மற்றும் இயற்கை வளங்களில் விளம்பரங்கள் எழுதவோ, சுவரொட்டிகள் ஒட்டவோ கூடாது என்று மாநகராட்சி தரப்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.


இந்த எச்சரிக்கையை மீறும் சம்பந்தப்பட்ட வர்த்தக நிறுவனம் / விளம்பர நிறுவனம், தொழிற் சங்கங்கள், அரசியல் அமைப்புகள், பொது நிகழ்ச்சி மற்றும் குடும்ப நிகழ்ச்சிக்காக சுவரொட்டி வைப்பவர்கள் ஆகியோருக்கு அபராதம் விதிப்பதுடன் குற்றவியல் வழக்குகள் தாக்கல் செய்யப்படும் என கடந்த ஜூலை 22ம் தேதி மாநகராட்சி எச்சரித்து இருந்தும் மாநகருக்குள் போஸ்டர்கள்/சுவரொட்டிகள் ஒட்டப்படுவது குறைவதில்லை. 


மாநகராட்சி விடுத்த எச்சரிக்கையை பின்பற்றி தனியார் அமைப்புகள்  போஸ்டர்கள் ஒட்டுவதை நிறுத்தி இருந்தன. ஆனால் சுதந்திர தினத்தன்று துவங்கி தற்போது வரை அரசியல் கட்சிகள் முதலில் முதல் அடி எடுத்து வைக்க  பின்னர் அதை தொடர்ந்து மீண்டும் தனியார் நிறுவனங்கள் துவங்கியுள்ளன.


சில கட்சிகளின் அரசியல் போஸ்டர்கள் வாழ்த்துதலை விட வம்பிழுக்கும் வகையில் ஒட்டப்பட அதற்கு பதிலடி தரும் வகையில்  மற்ற கட்சி போஸ்டர் ஓட்டுவது அண்மையில் மாநகருக்குள் அதிகரித்துள்ளது. இது செய்தியும் ஆகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.  


மாநகராட்சி எச்சரிக்கையை மீறி முதலில் கோவையில் மீண்டும் போஸ்டர்கள் வர அரசியல் கட்சிகள் காரணம் என்பது மறுக்கமுடியாத ஒன்று.