கோவை மெட்ரோ ரயில் திட்டத்திற்கான நிலம் கையகப்படுத்துதல் தொடர்பான நில அளவை பணிகள் விரைவில் துவங்க உள்ளதாக கோவை மாநகராட்சி தரப்பில் இருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது. 

கோவையில் விரைவில் துவங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகின்ற மெட்ரோ ரயில் பணிகளின் பூர்வாங்க பணிகள் தொடர்பாக சமீபத்தில் சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் பிரதிநிதிகள், தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள், தமிழக மின்சார வாரிய அதிகாரிகள், உள்ளூர் திட்ட குழுமம் மற்றும் சர்வே துறை அதிகாரிகள் ஆகியோர் கோவையில் ஒருங்கிணைப்பு கூட்டத்தை நடத்தினர்.

இந்த கூட்டத்தில் இத்திட்டத்திற்கான நிலம் கையகப்படுத்துதல் தொடர்பாகவும், மெட்ரோ ரயிலின் வழித்தடம் மற்றும் மெட்ரோ ரயில் நிலையங்கள் தொடர்பாகவும் ஆலோசிக்கப்பட்டது.

இந்த சர்வே பணிகளில் மெட்ரோ ரயில் திட்டம் அமைய உள்ள நிலங்களை அடையாளப்படுத்துதல், எங்கெல்லாம் குடிநீர், மின்சாரம் தொடர்பான பைப்புகள் அமைக்கப்பட்டுள்ளது என்பதை கண்டறிதல், மற்றும் அவற்றை வேறு பகுதிக்கு மாற்றி அமைக்க திட்டமிடல் போன்ற பணிகள் இடம்பெறும். சர்வே பணிகள் முடிவு பெற்றவுடன் எந்தெந்த நிலங்களை எல்லாம் கையகப்படுத்த வேண்டும் என்பதை அதிகாரிகள் தீர்மானிப்பார்கள்.

அவிநாசி சாலை மற்றும் சத்தி சாலை ஆகிய பகுதிகளில் கோவை மெட்ரோ ரயில் பணிகள் முதல் கட்டமாக கொண்டு வரப்படும். எனவே இதற்கான நிலம் கையகப்படுத்தும் பணி மார்ச் மாதத்தில் துவங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.