பதட்டமான சம்பவங்கள் நிகழ்ந்த கோவை மாவட்டத்தில் சட்டம்- ஒழுங்கு சீராக உள்ளதா என்பது குறித்து ஆய்வு மேற்கொள்ள தமிழக காவல் துறை தலைமை இயக்குநர் சைலேந்திர பாபு இன்று கோவை வருகிறார்.

 

நாடு முழுவதும் பல இடங்களில் கடந்த 22ஆம் தேதி தேசிய புலனாய்வு முகமை (என்.ஐ.ஏ.) சோதனை மேற்கொண்டு, பலரைக் கைது செய்தனா். சோதனையின்போது, பாப்புலா் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பினா் போராட்டத்தில் ஈடுபட்டு இடையூறு ஏற்படுத்தினா். அதனைத் தொடர்ந்து பாஜக பிரமுகர்களின் வீடு, அலுவலகங்களில் பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. 

 

கோவையில் சில இடங்களில் பெட்ரோல் குண்டு வீச்சு போன்ற சில சம்பவங்கள் நடைபெற்றதை அடுத்து காவல்துறையினர் மற்றும் பாதுகாப்பு பணியாளர் பெரிய அளவில் குவிக்கப்பட்டிருக்கின்றனர்.

 

மாநகர காவல் துறையினர் மற்றும் மாவட்ட நிர்வாகம் பொதுமக்கள் இதற்கு முன்னர் நடைபெற்ற சம்பவங்களை கருத்தில் கொண்டு அச்சப்பட வேண்டிய அவசியம் இல்லை எனவும் போதிய பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு கருத்து வேறுபாடு உடைய இரு பிரிவினர் இடையே தனித்தனியாக பேசி பொது அமைதி மாவட்டத்தில் நிலவ ஒத்துழைப்பு தர கேட்டிருப்பதாக தெரிவித்தனர்.