கோவை கொங்குநாடு கலை அறிவியல் கல்லூரியின் உடற்கல்வித்துறை, உலகக் குழந்தைகள் டேக்வேண்டோ அமைப்பு, இந்தியக் குழந்தைகள் டேக்வேண்டோ அமைப்பு மற்றும் தமிழ்நாடு குழந்தைகள் டேக்வேண்டோ அமைப்பு இணைந்து ஒருங்கிணைத்த குழந்தைகளுக்கான முதலாமாண்டு மாநில அளவிலான டேக்வேண்டோ சேம்பியன்ஷிப் 2025 நிகழ்வை சமீபத்தில் கல்லூரி வளாகத்தில் நடத்தினர். 

இந்த போட்டியில், தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களிலிருந்து 389 போட்டியாளர்கள் பங்கேற்றனர். இதன் துவக்க விழாவில், கொங்குநாடு கல்லூரியின் செயலர் மற்றும் இயக்குநர் சி. ஏ. வாசுகி தலைமையுரை வழங்கினார். இப்போட்டியில் பங்கேற்கும் வீரர்கள் பெரிய அளவில் சாதனைகள் நிகழ்த்தி ஒலிம்பிக் போட்டிகளில் நம் நாட்டிற்குப் பதக்கங்களை வெல்ல வேண்டுமென வாழ்த்தினார்.

உலகக் குழந்தைகள் டேக்வேண்டோ அமைப்பின் துணைத் தலைவர் மற்றும் இந்தியக் குழந்தைகள் டேக்வேண்டோ அமைப்பின் தலைவர் சிவராம் மக்வானா இந்நிகழ்வினைத் தொடங்கி வைத்தார். துடிப்பான இளம் வீரர்கள் தங்களது திறமைகளை வெளிப்படுத்திய விதம் பார்வையாளர்களை வெகுவாக ஈர்த்தது.

இப்போட்டியின் நிறைவில் கோயம்புத்தூர் மாவட்ட அணி முதலிடத்தையும், தென்காசி மாவட்ட அணி இரண்டாமிடத்தையும், திருவாரூர் மாவட்ட அணி மூன்றாமிடத்தையும், கரூர் மாவட்ட அணி நான்காம் இடத்தையும் பெற்றனர்.

இந்நிகழ்வில் சிவராம் மக்வானா, கொங்குநாடு கலை அறிவியல் கல்லூரியின் உடற்கல்வி இயக்குநர் மேஜர் பி. கே. கவிதாஸ்ரீயை தமிழ்நாடு குழந்தைகள் டேக்வேண்டோ அமைப்பின் துணைத் தலைவராக அறிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. கல்லூரி முதல்வர் வே. சங்கீதா, பேராசிரியர்கள், மாணவர்கள் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.