விவசாயிகள் வழங்கும் மனுக்கள் மீது அதிகாரிகள் முறையான பதில் வழங்குவது இல்லை என்று திருவண்னாமலை ஆட்சியர் தலைமையில் நடைபெற்ற விவசாயிகள் குறைதீர்ப்பு கூட்டத்தில் இயற்கை விவசாயிகள் சங்க உறுப்பினர் ஒருவர் குற்றச்சாட்டு வைத்ததற்கு திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் உச்சக்கட்டத்தில் பொங்கியெழுந்த வீடியோ ஊடங்களில் தற்போது வெளியாகியுள்ளது. 

 

இன்று வெளியான அந்த வீடியோவில் விவசாயிகள் சங்கத்தினர் ஒருவர் வைத்த குற்றச்சாட்டுக்கு அவர் வழங்கிய பதிலின் சுருக்கம் என்னவென்றால்:-


மாடு மாதிரி உழைத்துக்கொண்டிருக்கிறார்கள் நம்ம ஆட்கள். குறையை குறிப்பிட்டு சொன்னால் பரவாயில்லை பொதுவாக சொன்னால் எப்படி? ஏதோ பேசவேண்டும் என்று பேசினால் எப்படி? என்னுடைய அதிகாரிகள் எவ்வளவு கஷ்டப்படுகிறார்கள் என்று எனக்கு தெரியும். திங்கள் தவிர மத்த நாட்களில் 3 மணிக்கு மேல் தான் சாப்பிட செல்கிறோம். சும்மா குறைசொல்ல வேண்டாம். நீங்கள் 1.30க்கு சாப்பிட்டு நன்றாக அமர்ந்திருப்பீர்கள். எங்கள் ஆட்கள் 3.30 மணி 4.30 மணிக்கு தான் சாப்பிட செல்கின்றனர்...நான் யாரையும் விடுவதில்லை ...அவர்களை பிழிந்தெடுக்கிறேன். உங்கள் பிரச்சனை எந்த மாவட்டத்தில் என்று தெளிவாக சொல்லுங்கள். சும்மா உக்காந்து கொண்டு குற்றம் சாட்டு சொல்லாதீர்கள். நாக்கில் நரம்புடன் பேசவேண்டும். 

 

என்னுடைய அதிகாரிகளை தேவை இல்லாமல் குறை சொன்னால் நான் கோவப்படுவேன். நான் அவர்கள் தப்பு செய்தால் திட்டுவேன், ஆனால் நீங்கள் தேவை இல்லாமல் குறைசொன்னால் நான் கோவப்படுவேன். என்னுடைய அதிகாரிகள் வேலைபார்க்கின்றனர், ஏதாவது குறையிருந்தால் குறிப்பிட்டு சுட்டிக்காட்டுங்கள். பொத்தாம் பொதுவாக எதையும் சொல்லாதீர்கள். அப்படி இல்லை என்றால் எதுவும் சொல்லாதீர்கள். 

 

6 மாதமாக சுகர் வந்து நான் பாடுபட்டு கிடக்கிறேன்...எனக்கு தான் தெரியும் இங்குள்ள எத்தனை என்ஜினீயர்களுக்கு சுகர், பி.பீ. உள்ளது என்று.