கோவையிலிருந்து பொள்ளாச்சி வழியாக தென் மாவட்டங்களுக்கு ரயில்களை இயக்க வேண்டும் என்று சேலம் கோட்ட ஆலோசனைக் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.


ஆலோசனைக் கூட்டம் சேலம் கோட்ட ரயில் பயணிகள் சங்க 24வது ஆலோசனைக்கூட்டம் சேலத்தில் கோட்ட ரயில்வே மேலாளர் சீனிவாசன் தலைமையில் நேற்று நடந்தது. 

இதில் கோட்ட ரயில் பயணிகள் சங்கம் சார்பில் கே.ஜெயராஜ், ஆர்.எஸ்-.சண்முகம்,  ஜே.சதீஷ் ஆகியோரும் திருப்பூர் மற்றும் சேலம் கோட்ட ரயில் பயணிகள் நல சங்கத்தினர் 20 பேர் கலந்து கொண்டனர். 

இதுகுறித்து ரயில் பயணிகள் சங்கத்தினர் கூறியதாவது:

கோவை ரயில் நிலையத்தின் 150வது ஆண்டு விழாவை கொண்டாடுவது குறித்து ஆலோசிக்க கமிட்டி அமைப்பது.  கோவை நகருக்குள் நிலவும் போக்குவரத்து நெருக்கடியை குறைக்க கோவையை சுற்றிலும் சர்க்குலர் ரயில் வசதியை  மேம்படுத்த வேண்டும். 


ரயில் நிலைய மறுசீரமைப்பு திட்டத்தில் கோவை, மேட்டுப்பாளையம், வடகோவை ஆகியவை  சேர்க்கப்பட உள்ளன. இதில் கோவை ரயில் நிலையம் பி.பி.பி. என்ற தனியார் பங்களிப்புடன் மேம்படுத்தப்படும் என்று  தெரிகிறது. போத்தனூர் ரயில் நிலையத்தை மேம்படுத்தி அங்கு அதிக ரயில்களை கையாளும் வகையில் பல்வேறு  வசதிகளை ஏற்படுத்த ரயில்வே நிர்வாகம் உறுதி அளித்துள்ளது. 


ரயில் நிலையங்களில் ரயில் பெட்டி நிற்கும் இடங்கள்  பற்றிய அறிவிப்பு பலகை, தகவல் பலகை, அருகில் உள்ள சுற்றுலா தலங்கள் பற்றிய விவரங்கள் அடங்கிய தகவல்  பலகை வைக்கவும், ரயில் நிலையங்களை சுத்தமாக பராமரிப்பதற்கும் அதிகாரிகள் தரப்பில் கூட்டத்தில் ஒப்புக் கொள்ளப்பட்டது.


தென் மாவட்டங்களுக்கு ரயில்கள் கோவையிலிருந்து பொள்ளாச்சி வழியாக ஏற்கனவே இயக்கப்பட்ட ராமேசுவரம், தூத்துக்குடி, திருச்செந்தூர் ஆகிய  தென் மாவட்டங்களுக்கு ரயில்களை இயக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டது. அந்த சேவைகளை  விரைவில் தொடங்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தனர். 


விழாக்காலத்தையொட்டி சிறப்பு ரயில்களை  அக்டோபர் மாத கடைசியிலிருந்து அடுத்த ஆண்டு ஜனவரி வரை இயக்க வலியுறுத்தப்பட்டது. கோவை&பெங்களூரு  இடையே விரைவான ரயில் சேவை அளிக்கும் வகையில் வந்தேபாரத் ரயில்களை அன்றே திரும்பி வரும் வகையில்  இயக்க வலியுறுத்தப்பட்டது. அதற்கு சேலம் கோட்ட ரயில்வே அதிகாரிகள் பரிசீலிப்பதாக தெரிவித்தனர். 


தற்போது  உள்ள கட்டமைப்பின் படி ரயில்களின் வேகத்தை மணிக்கு 130 கிலோ மீட்டருக்கு அதிகரிக்க வேண்டும் என்று  வலியுறுத்தப்பட்டது. இதன் மூலம் பயணம் செய்யும் நகரங்களுக்கிடையே உள்ள நேரம் வெகுவாக குறையும் என்றும்  தெரிவிக்கப்பட்டது. 


கோவை-பெங்களூரு இடையே இயக்கப்படும் டபுள் டெக்கர் உதய் எக்ஸ்பிரசை ஓசூர் வழியாக  திருப்பி விட வேண்டும். மேலும் திருச்செந்தூர் எக்ஸ்பிரசை பொள்ளாச்சியிலிருந்து மேட்டுப்பாளையத்துக்கும், கொக்சுவேலி&ஹுப்ளி எக்ஸ்பிரஸ், எர்ணாகுளம்&டாடா நகர் எக்ஸ்பிரசை கோவை வரை நீட்டிக்குமாறும் ரயில்வே நிர்வாகத்திடம் கோரிக்கை வைக்கப்பட்டது. 


போத்தனூர் வழியாக செல்லும் சில முக்கிய ரயில்களை போத்தனூரில் நின்று  செல்ல ஏற்பாடு செய்யுமாறும் அறிவுறுத்தப்பட்டது. மேட்டுப்பாளையம்&கோவை இடையே இயக்கப்படும் மெமு என்ற  மின்சார ரயிலை ஞாயிற்றுக்கிழமைகளிலும் இயக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டது.


இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.