நேற்று காலை கோவை பீளமேடு பகுதியில் உள்ள ஜீ.வி. ரெசிடென்சி பகுதியில் நடந்து சென்ற பெண்ணிடம் காரில் வந்து செயின் பறிப்பில் ஈடுபட்ட 2 திருடர்களை ஒரே நாளில் காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.


இந்த வழக்கு சம்பந்தமாக கோவை மாநகர காவல் ஆணையாளர் அலுவலகத்தில் மாநகர துணை ஆணையர் சண்முகம், சந்தீஷ், மற்றும், சிங்காநல்லூர் உதவி ஆணையர் பார்த்திபன் ஆகியோர் செய்தியாளர்களை சந்தித்தனர்.


அவர்கள் செய்தியாளர்களிடம் பேசுகையில்:- 

காரில் வந்து பெண்ணிடம் செயின் பறித்த சம்பவம் கோவையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், அங்கு வைக்கபட்டு இருந்த சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை கொண்டு விசாரணை நடத்தி இந்த திருட்டில் ஈடுபட்ட அபிஷேக், சக்திவேல் ஆகிய இருவரை கைது செய்துள்ளோம்.  இந்த வழக்கில் சம்பந்தபட்ட காரை பறிமுதல் செய்துள்ளோம். 

இந்த வழக்கில், குற்றவாளிகளை ஒரே நாளில் கண்டுபிடிக்க, சிசிடிவி கேமரா பெரிய அளவில் உதவியது. 

கோவை மாநகர காவல் ஆணையரின் வழிகாட்டுதல் படி, காவல் துறை சார்பில் மாநகரின் பல இடங்களில் சிசிடிவி கேமராக்கள் பொருத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. 

ராமநாதபுரம் காவல் நிலையம் கீழ் 200 கேமராக்கள், சாய் பாபா காவல் நிலையம் கீழ் 200, இதர நிலையங்கள் கீழ் 300-400 கேமராக்கள் பொறுத்த பட்டுள்ளது. கடந்த 1-2 மாதங்களில் 800 கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. அணைத்து காவல் நிலையங்கள் கீழ் உள்ள பகுதிகளில் கேமராக்கள் பொருத்த நடவடிக்கை எடுக்கபட்டு வருகிறது.
 

பொதுமக்கள் தங்கள் வசிக்கும் பகுதிகளில் சிசிடிவி கேமராக்களை பொருத்தினால் காவல் துறை இது போன்ற சம்பவங்களை விசாரிக்க மிகவும் உதவியாக இருக்கும். 

 

இவ்வாறு அவர்கள் கூறினர்.