கேரளா மாநிலம் பாலக்காட்டில் அமைந்துள்ள 50 அடி உயரம் கொண்ட சிறுவாணி அணையில் ஏற்படும் நீர் கசிவால் தினமும் 10 லட்சம் லிட்டர் நீர் அணையிலிருந்து வீணாவதாக தமிழக குடிநீர் வடிகால் வாரிய துறை அதிகாரிகள் கோவை மாநகராட்சிக்கு கடிதம் மூலம் தெரிவித்துள்ளனர். 

தற்போது பருவமழை பெய்து வந்தாலும் அணையின் அனுமதிக்கப்பட்ட நீர்த்தேக்க அளவை (45 அடி) எட்டமுடியாமல் போக இதுவும் ஒரு காரணமாக இருக்கும் என கருதப்படுகிறது. எனவே இதை சரிசெய்ய வேண்டியது மிக அவசியமாகிறது.

இந்த நிலையில் இந்த கசிவுகள் பற்றி ஆய்வு செய்து அதை சிறந்த முறையில் சரிசெய்ய மத்திய நீர் மற்றும் மின்சார ஆராய்ச்சி நிலையத்தின் உதவியை கோவை மாநகராட்சி நாடியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதே சமயத்தில் கேரளா தரப்பிலிருந்தும் கசிவுகளை சரிசெய்ய விரிவான திட்ட அறிக்கை தயார் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன.

தற்போது அணையின் பாதுகாப்பை உறுதிசெய்ய மத்திய அணை பாதுகாப்பு அமைப்பின் வழிகாட்டுதல்களை பெற முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் தமிழக நகராட்சி நிர்வாக ஆணையரிடம் இந்த கசிவுகளை சரி செய்ய தேவைப்படும் நிதியை பெறவும் கோவை மாநகராட்சி முடிவு செய்துள்ளது. இந்த சீரமைப்பு பணிகள் 1-2 மாதங்களில் துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.