விவசாய நிலங்களை சேதப்படுத்தும் காட்டுப் பன்றிகளை துப்பாக்கி பயன்படுத்தி கட்டுப்படுத்த அனுமதிக்க வேண்டும் என்ற கோவை விவசாயிகள் கோரிக்கை அரசிடம் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் அது பரிசீலனையில் உள்ளதாகவும் கோவை மாவட்ட ஆட்சியர் சமீரன் இன்று தெரிவித்தார்.

 

 

இதன் பின்னணி: 

 

கோவை மாவட்டம் தொண்டாமுத்தூா், காரமடை, மேட்டுப்பாளையம், ஆனைமலை உள்ளிட்ட வனத்தை ஒட்டியுள்ள விவசாய நிலங்களில் காட்டு பன்றிகள் சைவ காலத்தில் அதிக சேதத்தை ஏற்படுத்தி வருகின்றது.

 

அத்தோடு நிற்காமல் தற்போது காட்டுப்பன்றிகள் சமவெளிப் பகுதிகளிலும் பாதிப்பை ஏற்படுத்துகின்றன.

 

தென்னை, வாழை, மக்காச்சோளம் உள்ளிட்ட அனைத்து விதமான பயிா்களிலும் காட்டுப்பன்றிகள் சேதத்தை ஏற்படுத்துகின்றன. பாதிக்கப்படும் விவசாயிகளுக்கும் பயிர்களுக்கும் போதிய நிவாரணம் கிடைப்பதில்லை என்றும் விவசாயிகள் தரப்பில் தெரிவிக்கின்றனர்.

 

எனவே விவசாய நிலங்களை சேதப்படுத்தும் காட்டுப் பன்றிகளை உள்ளாட்சி நிா்வாக அனுமதியுடன் துப்பாக்கி மூலம் சுட்டுக்கொல்வதற்கு கேரள அரசு அனுமதியளித்துள்ளதை போல தமிழகத்திலும் உள்ளாட்சி நிா்வாகம் மற்றும் அரசுத் துறைகளின் அனுமதியுடன் பயிா்களை சேதப்படுத்தும் காட்டுப் பன்றிகளை துப்பாக்கி பயன்படுத்தி கட்டுப்படுத்த அனுமதிக்க வேண்டும் இன்று வேண்டுகோள்களை கோவை பகுதியை சேர்ந்த விவசாயிகள் முன்வைத்து வருகின்றனர்.

 

 

விவசாயிகள் குறை தீர்ப்பு கூட்டத்தில் ஆட்சியர் தெரிவித்தது:

 

இந்நிலையில் கோவை ஆட்சியர் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற விவசாயிகள் குறைதீர்ப்பு கூட்டத்தில், மாவட்ட ஆட்சியர் சமிரன், காட்டுபன்றிகளை சுட்டு கொல்வதற்கான விவசாயிகளின் கோரிக்கை பரிசீலனையில் உள்ளது எனவும் இந்த பிரச்சினை தொடர்பாக, காட்டுபன்றிகளை சுடுவதற்கான கேரள அரசு பிறப்பித்துள்ள ஆணையை இணைத்து தமிழக அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது எனவும், அரசும் பரசீலனை செய்து வருவதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.