கோவை சிங்காநல்லூர் பகுதியில், இந்தியா கூட்டணியின் கோவை பாராளுமன்ற தொகுதி வேட்பாளர் கணபதி ராஜ்குமாரை ஆதரித்து தமிழக விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி இன்று வாக்கு சேகரித்தார்.

அப்போது பேசிய அவர், கோவை மாவட்டத்தில் மகளிர் இலவச பேருந்து திட்டம் மூலம் 27 கோடி பயணங்களை இம்மாவட்ட மகளிர் மேற்கொண்டு உள்ளனர் என்றார். இதனால் ஒவ்வொரு பெண்ணுக்கும் மாதம் ரூ.900 வரை சேமித்து உள்ளனர் என்றார்.

புதுமை பெண் திட்டம் மூலம்,  கோவை மாவட்டத்தில் அரசு பள்ளியில் பயின்று கல்லூரி கல்வி பயிலும் 14,000 மாணவிகள் ஒவ்வொரு மாதமும் ரூ.1000 பெறுகின்றனர்.

1ஆம் வகுப்பு  முதல் 5 ஆம் வகுப்பு முதல் பயிலும் அரசு பள்ளி மாணவர்களுக்கான முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தின் கீழ் கோவை மாவட்டத்தில் தினமும் 80,000 மாணவ மாணவிகள் சத்தான உணவை உண்ணுகின்றனர் என்றார்.

மேலும் அவர் கோவை மாவட்டத்தில் தகுதி இருந்தும் மகளிர் உரிமை தொகை பெறாமல் இருப்பவர்களுக்கு அடுத்த 5 மாதத்தில் அந்த திட்டத்தின் பயன் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என வாக்குறுதி வழங்கினார்.

கோவை தொகுதியில் 10 ஆண்டுகளுக்கு பின்னர் உதய சூரியன் சின்னம் களத்தில் இறங்கியுள்ளது. எனவே குறைந்தது 4 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் திமுக வேட்பாளர் கணபதி ராஜ்குமாரை வெற்றிபெற செய்யவேண்டும் என கோவை மக்களிடம் அவர் கேட்டுக்கொண்டார்.