தமிழ் நாடு என்பது இந்தியாவிலேயே உயர்கல்வியில் பல நிலைகளில்  சிறந்து விளங்கும் மாநிலமாக உள்ளது, இந்தியாவின் தலைசிறந்த 100 கல்வி நிறுவனங்களில் 18 நிறுவனங்களும், தலைசிறந்த 100 பல்கலைக்கழகங்களில் 21 பல்கலைக்கழகங்களும் தமிழ்நாட்டில் அமைந்துள்ளது  என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கோவையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் தன்னுடைய மகிழ்ச்சியை  பகிர்ந்துகொண்டார். 

கோவை  பி.எஸ்.ஜி கலை அறிவியல் கல்லூரியின் பவள விழாவில் கலந்து கொண்ட முதலமைச்சர் ஸ்டாலின்  கல்விக்காக தமிழ் நாடு அரசு பல உன்னதமான திட்டங்களை செயல்படுத்தி  வருகிறது என்றும், தமிழ்நாட்டில் உள்ள அனைத்து  இளைஞர்களும் அவரவர்களின் துறையில் முதல்வனாக இருக்க வேண்டும் என்பதற்காகவே 'நான் முதல்வன்' திட்டத்தை இந்த அரசு செயல்படுத்தி வருகிறது என்று குறிப்பிட்டார். 

இன்னும் பத்து ஆண்டுகளிலே தமிழ்நாட்டு இளைஞர்கள் அடையக்கூடிய தகுதி உயர்வை எண்ணி தான் பூரிப்படைவதாக இருந்தாலும் இளைய  சமுதாயத்தில்  மாணவர்கள் மற்றும் சில மாணவிகளும் போதைக்கு அடிமையாவது கவலை அளிப்பதாக கூறினார். 

இந்த பழக்கத்திற்கு அடிமையானவர்களை மீட்க வேண்டும் எனவும்  புதிதாக யாரும் அடிமையாகமல்  தடுக்க வேண்டும் என்ற நோக்கில் தமிழக அரசு பல விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை  தொடர்ந்து நடத்தி வருகிறது என்றார். 

"மாணவன் போதைக்கு அடிமையாவது அவனுக்கும் அவன் குடும்பத்திற்கு மட்டுமல்ல இந்த மாநிலத்தின் வளர்ச்சிக்கும் தடையாக இருக்கும்," என்றார். 

தமிழ்நாட்டில் இருக்கும் அத்தனை நிறுவனங்களும் நல்ல கல்வியுடன் நல்லொழுக்கத்தையும் மாணவ மாணவிகளுக்கு கற்றுக் கொடுக்க வேண்டும் என்று ஒரு முக்கிய வேண்டுகோளை அவர் இந்த நிகழ்ச்சியில் முன்வைத்தார்.