கலைஞர் நூற்றாண்டு நிறைவு விழா, மக்களாவை தேர்தலில் திமுக-இந்தியா கூட்டணிக்கு தமிழகத்தில் கிடைத்த வெற்றியை வழங்கிய மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் விழா மற்றும் தி.மு.க. தொண்டர்களுக்கான பாராட்டு விழா என மூன்று நிகழ்வையும் ஒன்றாக இனைத்து முப்பெரும் விழாவாக ஜூன் 15 ஆம் தேதி, திமுக சார்பில் கோவை கொடிசியா அரங்கில் நடத்திட பணிகள் நடைபெற்றுவருகின்றன.  

இது பற்றி மேலும் முதலமைச்சர் ஸ்டாலின் இன்று X தளத்தில் கூறியதாவது :-

கோவையில் நம் தோழமைக் கட்சித் தலைவர்களின் பங்கேற்புடன் நடைபெறவுள்ள முப்பெரும் விழா என்பது மாபெரும் ஜனநாயகக் கொண்டாட்டமாக அமையவிருக்கிறது.  மேற்கு மண்டலத்தின் உண்மையான நிலை என்ன என்பதை இந்த வெற்றியின் வாயிலாக மக்கள் உணர்த்தியிருக்கிறார்கள்.

அதனால்தான் கோவையில் முப்பெரும் விழா நடைபெறுகிறது. கழக மாநாடுகள், பொதுக்கூட்டங்கள், வெற்றி விழாக்கள் - வெறும் கூடிக் கலையும் நிகழ்வல்ல; உடன்பிறப்புகளுக்கான பயிற்சி அரங்கம். அடுத்த களத்திற்கான ஆயத்தப் பணி.

கோவை முப்பெரும் விழாவைத் தொடர்ந்து விக்கிரவாண்டி தொகுதியில் தொடர் வெற்றியினை உறுதி செய்தாக வேண்டும். அதனைத் தொடர்ந்து, ஊரக உள்ளாட்சித் தேர்தலுடன் 2026 சட்டமன்றத் தேர்தல் களத்திற்கும் நாம் இப்போதே ஆயத்தமாக வேண்டும்.

2026 சட்டமன்றத் தேர்தலில் 200+ தொகுதிகளில் வெற்றியினை உறுதி செய்திட ஜூன் 15 கோவை முப்பெரும் விழா நமக்கு ஊக்கமளிக்கும் இடமாக அமையட்டும்.  கோவை குலுங்கிட கொள்கைத் தீரர்களே திரண்டிடுக, என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று கூறினார்.