கச்சத்தீவு இலங்கைக்கு எப்படி வழங்கப்பட்டது என்பது குறித்த முக்கிய தகவல்களை தகவல் அறியும் உண்மை சட்டத்தின் கீழ் வெளியுறவு துறை அமைச்சகத்திடம் சில வாரங்களுக்கு முன்னர் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை  RTI மனுவாக கேட்டதாகவும், அதற்கான பதில்கள் கிடைத்துள்ளதாகவும் நேற்று அவர் செய்தியாளர்களிடம் கூறியிருந்தார். 

RTI மனு மூலமாக கிடைத்த தகவல்களின்  ஒரு பகுதியை இன்று கோவையில் அவர் செய்தியாளர் சந்திப்பில் பகிர்ந்து கொண்டார். 

அதில் 1974 ஆம் ஆண்டில் முன்னாள் தமிழக முதலமைச்சர் கருணாநிதி அவர்களும் வெளியுறவு துறை செயலர் கேவல் சிங் அவர்களும் கச்சத்தீவு பற்றி பேசியது :-

இதற்கு முன்னர் கச்சத்தீவு குறித்து திமுக தலைவர்கள் சொன்னது என்னவென்றால், கச்சத்தீவை காங்கிரஸ் தங்களை (திமுக) கேட்காமலும், தங்கள் போராட்டத்தை தாண்டியும் கொடுத்துவிட்டனர் என்று தான். 

குறிப்பாக செழியன் உள்பட அப்போதைய தி.மு.க. பாராளுமன்ற உறுப்பினர்கள் கூறியது, கருணாநிதிக்கு தகவல் சொல்லாமல், கேட்காமல் அந்த தீவு வழங்கப்பட்டது என்று தான். ஆனால் RTI ஆவணங்களை பெற்றபின்னர் தெரியவருவது என்னவென்றால், அன்றைய வெளியுறவு துறை செயலர் கேவல் சிங்கும், தமிழக முதலமைச்சர் கருணாநிதியும், 19 ஜூன் 1974ல் சுமார் 1 மணி நேரம் சந்தித்து பேசியுள்ளனர். 

அந்த சந்திப்பு குறித்தான குறிப்பு (Minutes) இதுவரை பொது பார்வைக்கு வைக்கப்படாத கோப்பாக இருந்தது. தற்போது RTI  மூலம் அதை பார்த்தபோது, அதில் கச்சத்தீவை இலங்கைக்கு தருவதற்கு 1 மாதத்திற்கு முன்பே கேவல் சிங் கருணாநிதியை சந்தித்து, கச்சத்தீவை வழங்குவது பற்றி பேசி, அவரின் சம்மதத்தை பெற்ற பின்னர் தான் அது இலங்கைக்கு வழங்கப்பட்டது என்பது தெரியவருகிறது, என்றார். 

மேலும் 9 பக்கம் கொண்ட அந்த சந்திப்பு குறிப்பை செய்தியாளர்களுக்கு அண்ணாமலை வெளியிட்டார். 

அன்றைய முதலமைச்சர் கருணாநிதியின் முடிவும் கச்சத்தீவை இலங்கைக்கு வழங்கும் போது இருந்தது என்பது  உறுதியாகி உள்ளது, என்றார். 

கச்சத்தீவை இலங்கைக்கு தருவதற்கு காங்கிரஸ் அரசுக்கு சம்மதம் தெரிவித்ததுடன், கருணாநிதி இதுகுறித்து சிறிதாக ஒரு போராட்டம் நடத்திக்கொள்கிறேன் என வெளியுறவு துறை செயலர் கேவல் சிங்கிடம் கேட்டுக்கொண்டுள்ளார், என அண்ணாமலை கூறினார். அன்று கலைஞர் கருணாநிதி கச்சத்தீவை தர மறுத்திருந்தால் அது நம் நாட்டை விட்டு சென்றிருக்காது என்றார்.