கோவை நேரு ஸ்டேடியம் அருகே அமைந்துள்ள கோவை மாநகராட்சி கூடைப்பந்து மைதானம் கிட்டத்தட்ட ரூ.1 கோடி மதிப்பில் முற்றிலுமாக புதுப்பிக்கப்பட்டு இன்று அகில இந்திய அளவிலான ஆண்கள் மற்றும் பெண்களுக்கான கூடைப்பந்து போட்டிக்காக திறக்கப்பட்டது.
கோவை மாவட்ட கூடைப்பந்து சங்கம் (CDBA) மற்றும் கோவை மாநகராட்சி இனைந்து இந்த மைதானத்தை நமக்கு நாமே திட்டத்தின் கீழ் புதுப்பிக்க முடிவு செய்து கடந்த மார்ச் மாதத்தில் பணியை துவங்கினர்.
இந்த புதுப்பிக்கும் பணிகள் வேகமாக நடைபெற்று வந்தது. ஜூன் 2க்குள் பணிகள் முடிக்கப்பட்டது. இந்த பணிகளுக்கான ஏற்பட்ட மொத்த செலவில் தமிழக அரசு 49%, CDBA 51% நிதி பகிர்ந்துகொண்டது.
இந்த கூடைப்பந்து மைதான வளாகத்தில் 2 மைதானங்கள் (Basketball Courts) உள்ளன. முன்னர் திறந்தவெளி வளாகமாக இருந்த இவை தற்போது முழுவதுமாக பிரமாண்ட கூரையின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது.
கூரையில் 50 LED விளக்குகள் பொருத்தப்பட்டு உள்ளதால் மாலை நேர போட்டிகள் மற்றும் பயிற்சிகள் நடத்திட மிகவும் உபயோகமாக இருக்கும். இதற்கு முன்னர் மைதானங்களில் பயன்படுத்தப்படும் உயர் கம்ப விளக்குகளுக்கு பதிலாக இந்த விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளது.
கூடை பந்து கம்பம், வளையங்கள், பின்பலகை யாவும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. கம்பத்தில் வீரர்கள் மோதினால் அடிபடாதபடி மென்மையான ஸ்பான்ஜ் போன்ற தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளது.
விளையாடும் தளம் வர்ணம் தீட்டப்பட்டுள்ளதுடன், போட்டிகளின் போது துல்லியமாக நேரத்தை, புள்ளிகளை காட்டும் டிஜிட்டல் பலகையும் அமைக்கப்பட்டுள்ளது.
முக்கியமாக ரசிகர்கள்/பார்வையாளர்கள் அமர்ந்து பார்க்கும் பகுதிகளும் கூரையின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது. மேலும் ஆண் பெண் மற்றும் மாற்று திறனாளிகள் பயன்படுத்த கழிவறைகள் புதிதாக அமைக்கப்பட்டுள்ளது.
இப்படி பட்ட ஒரு கூடைப்பந்து வளாகம் கோவை மாநகரில் அரசு அமைத்திட வேண்டும் என்பது கூடைப்பந்து பிரியர்கள் பலரின் எதிர்பார்ப்பு. இது இப்போது CDBA மற்றும் கோவை மாநகராட்சி எடுத்த முயற்சியால் நிறைவேறியுள்ளது. விரைவில் முழு CCTV கேமரா கண்காணிப்பில் இந்த வளாகம் கொண்டுவரப்படவுள்ளது.
அகில இந்திய அளவிலான ஆண்கள் மற்றும் பெண்களுக்கான கூடைப்பந்து போட்டி!
கோவை மாவட்ட கூடைப்பந்து சங்கம் சார்பில், ஆண்களுக்கான 57வது நாச்சிமுத்து கவுண்டர் கோப்பை மற்றும் பெண்களுக்கான 21வது சி.ஆர்.ஐ., பம்ப்ஸ் கோப்பைக்கான கூடைப்பந்து போட்டிகள் இன்று இந்த வளாகத்தில் துவங்கின.இதற்கு சிறப்பு விருந்தினராக சக்தி குழுமத்தின் தலைவர் M. மாணிக்கம் கலந்து கொண்டு நிகழ்வை CDBA தலைவர் செல்வராஜ், செயலர் பாலாஜி முன்னிலையில் துவக்கி வைத்தார்.
இன்று முதல் 9ம் தேதி வரை இந்த போட்டிகள் நடக்கிறது. இதில் இரு பிரிவுகளிலும், தலா 8அணிகள் பங்கேற்கின்றன.
ஆண்கள் பிரிவில் - வருமான வரி துறை - சென்னை, கேரளா மின்சார வாரியம், டெல்லி மத்திய செயலகம், CDBA, இந்தியன் பேங்க் - சென்னை, பேங்க் ஆப் பரோடா - பெங்களூரு, உத்தர பிரதேச காவல் துறை, சென்னை லயோலா ஆகிய அணிகள் மோதுகின்றன. ஆண்கள் பிரிவில் முதல் பரிசு ரூ.1 லட்சம் மற்றும் நாச்சிமுத்து கவுண்டர் சுழற்கோப்பையும், இரண்டாம் பரிசாக ரூ.50 ஆயிரம் மற்றும் டாக்டர். என். மகாலிங்கம் கோப்பையும், மூன்றாம் பரிசாக ரூ.20 ஆயிரம், நான்காம் பரிசாக ரூ.15 ஆயிரம் வழங்கப்படும்.
பெண்கள் பிரிவில், கேரளா மின்சார வாரியம், தென்-மத்திய ரயில்வே - செகுந்தராபாத் (தெலுங்கானா), மேற்கு ரயில்வே - மும்பை, CDBA, கிழக்கு ரயில்வே - கொல்கத்தா, மத்திய ரயில்வே - மும்பை, தென்னக ரயில்வே - சென்னை, ரைசிங் ஸ்டார் அணி - சென்னை ஆகிய அணிகள் மோதுகின்றன. பெண்கள் பிரிவில், முதல் பரிசு ரூ.50 ஆயிரம் மற்றும் சி.ஆர்.ஐ., பம்ப்ஸ் சுழற் கோப்பையும், இரண்டாம் பரிசாக ரூ.25 ஆயிரம் மற்றும் சுழற் கோப்பையும், மூன்றாம் பரிசாக ரூ.15 ஆயிரம், நான்காம் இடம் பிடிக்கும் அணிக்கு ரூ.10 ஆயிரம் வழங்கப்படுகின்றன. போட்டிகளை காண கட்டணம் எதுவும் இல்லை.
படங்கள் : Rahi & David Karunakaran.S
புது பொலிவுடன் ஜொலிக்கும் கோவை மாநகராட்சி கூடைப்பந்து மைதானம்!
- by David
- Jun 05,2024