மாநகராட்சி சார்பில் சர்வதேச தரத்துடன் கூடிய ஹாக்கி மைதானம் அமைக்கும் பணி ஆர்.எஸ்.புரம் பகுதியில் வேகமாக நடைபெற்றுவருகிறது.

ரூ.9.67 கோடி மதிப்பீட்டில் கோவை மாநகராட்சி மேற்கு மண்டலம் வார்டு எண் 72க்கு உட்பட்ட மாநகராட்சி மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் உள்ள விளையாட்டு மைதானத்தில் செயற்கை புல்வெளி தளமிடப்பட்ட ஹாக்கி மைதானம் அமைக்கும் பணிகள் ஏப்ரல் 27ம் தேதி துவங்கியது. தற்போது 60%க்கும் மேல் பணிகள் நிறைவு பெற்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மைதானத்தின் பிரதான ஆடுகளம் அமையும் இடம் கவனத்துடன் தயார் செய்யப்பட்டு வருகிறது.

அடுத்த சில நாட்களில் இந்த பகுதியின் மேலே 6500 சதுர அடிக்கு செயற்கை புல்வெளி தளம் அமையும். அது சர்வதேச ஹாக்கி கூட்டமைப்பின் சான்று பெற்ற புல்வெளி தளமாக இருக்கும். அது முறையே அமைக்கப்பட்டுள்ளதாக என இக்கூட்டமைப்பின் பிரதிநிதி ஆய்வு செய்து சான்றளிப்பார் என தெரியவருகிறது.

தற்போது இந்த தளம் அமைகிற இடத்தை சுற்றி வேலிகள் அமைக்கபட்டுள்ளது.

முதல் கட்ட பணிகளில், 500 வாட்ஸ் திறன் கொண்ட 20 எல்.இ.டி. விளக்குகள் பொருத்தப்பட்ட 17 மீட்டர் உயரம் கொண்ட 6 உயர் விளக்கு கோபுரங்கள் அமைக்கப்பட்டுள்ளது. 

கழிவறைகள், வீரர்கள் உடைமாற்றும் அறைகள் ஆகியவை கட்டும் பணிகள் நடைபெற்றுவருகிறது. இந்த பணிகளுக்கு பின்னர் 1700 பேர் அமர்ந்து போட்டிகளை பார்க்க பார்வையாளர்கள் அரங்கம், வாகன நிறுத்தும் வசதி (114 கார்/208 இரண்டு சக்கர வாகனங்கள்) நடைபெறும்.

இந்த மைதானம் பயன்பாட்டுக்கு வரும்போது மாநில, தேசிய அளவிலான ஹாக்கி போட்டிகள் நடத்த ஒரு சிறந்த இடமாக கோவை அறியப்படும் என நிச்சயமாக எதிர்பார்க்கலாம்.

படங்கள் : ராஜன்