ஐ.டி. துறையில் ஆச்சரியப்படுத்தும் வேகத்தில் செல்லும் கோவை! 2024ல் இத்தனை முன்னேற்றங்களா!
- by admin
- Jan 08,2024
உள்ளூர் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் ( ஐ.டி.) முதல் வெளிநாட்டு நிறுவனங்கள் வரை கோவை மாநகரம் மீது கடந்த சில காலமாக ஆர்வம் காட்டிவருகின்றனர் என்பது நாம் அறிந்ததே. அண்மையில் தகவல் தொழில்நுட்ப துறை ஜாம்பவான்களான இன்போசிஸ், டாடா போன்றவை கோவைக்கு வருகை தந்திருப்பதே அதற்கு சான்று.
இந்நிலையில், மேலும் பல நிறுவனங்கள் 2024-2025 காலத்தில் கோவையில் கால் பதிக்க ஏதுவாக இங்குள்ள தனியார் துறையினர் அதற்கான அனைத்து முயற்சிகளையும் ஆர்வத்துடன் முன்னெடுத்து வருகின்றனர், அதில் வேகத்தையும் காட்டி வருகின்றனர் என்றால் உங்களால் நம்ப முடிகிறதா?
அப்படி என்ன நடந்து வருகிறது கோவையில்?
கோவை கீரணத்தம் பகுதியில் உள்ள இந்தியா லேண்ட் ஐ.டி. பூங்கா 4 லட்சம் சதுரடி நிலத்தில் தனது 3ம் கட்ட விரிவாக்கத்தை கையில் எடுத்து வருகிறது.
சரவணம்பட்டி பகுதியில் ஆதித்யா கன்வென்ஷன் சென்டர் தற்போது ஒரு அதிநவீன அம்சங்கள் கொண்ட 3 லட்சம் சதுரடி கொண்ட ஐ.டி. பூங்காவாக மாறிவருகிறது. தளம் ஒன்றுக்கு 75,000 சதுரடி ஒதுக்கப்பட்டுள்ளது.
L&T பை பாஸ் சாலை - நீலாம்பூர் பகுதியில் KPR ஐ.டி. பூங்கா 2.17 லட்சம் சதுரடியில் மிக பிரமாண்டமாக உருவாகிவருகிறது. இது வரும் ஏப்ரல் மாதத்தில் திறக்கப்பட வாய்ப்புள்ளது.
ஈச்சனாரி பகுதியில் உள்ள ரத்தினம் டெக் சோன் 1.5 லட்சம் சதுரடியில் அந்த வளாகத்தை விரிவாக்கம் செய்துவருகிறது.
காளப்பட்டி பகுதியில் செயல்பட்டு வரும் SVB ஐ.டி. பூங்காவில் ஏற்கனவே இன்போசிஸ் 1 முதல் 7 தளங்களை எடுத்துள்ளது. அடுத்தடுத்த விரிவாக்கத்திற்கு இந்த பூங்கா செல்லவிருக்கின்றது. இதனால் கோவையில் 10 லட்சம் சதுரடி கொண்ட மிக பெரும் ஐ.டி. பூங்காவாக இது விளங்கும்.
மலுமிச்சம்பட்டி பகுதியில், L&T டெக் பார்க் அமையவுள்ளதாக செய்திகள் வந்தநிலையில் தற்போது அது உறுதி படுத்தப்பட்டுள்ளது. சுமார் 1.85 மில்லியன் சதுர அடி நிலப்பரப்பில் அந்த பூங்கா அமைகிறது. அதற்கான பணிகள் நடைபெற்றுவருகின்றன.
இதற்கெல்லாம் மேல, கோவையை சேர்ந்த KGISL குழுமம் ரூ.1000 கோடி மதிப்பீட்டில் அதிநவீன ஐ.டி. பூங்காவை அமைக்க ஒப்பந்தம் செய்துள்ளது.
ஐ.டி. பூங்காகள் இத்தனை வருவதால், அதிகப்படியான ஐ.டி. நிறுவனங்களும், அதனால் அதிகமான வேலைவாய்ப்பும் நம் இளைஞர்களுக்கு கிடைக்கும் வாய்ப்பு உருவாகி உள்ளது.
தனியார் பங்களிப்பு கோவையின் வளர்ச்சியில் என்றுமே அதிகமாக இருந்துள்ளது. இதை மீண்டும் ஒருமுறை எடுத்துரைக்கும் விதமாக இந்த முயற்சிகள் உள்ளன என்பதில் மாற்றுக்கருத்து இல்லை.