கோவைக்கு 2025 பட்ஜெட்டில் அறிவித்த திட்டத்துக்கு டெண்டர் கோரியது மெட்ரோ நிறுவனம்!
- by David
- Jul 11,2025
2025-26 நிதியாண்டுக்கான பட்ஜெட் அறிவிப்புகளில் கோவையின் வளர்ச்சிக்கான சில அறிவிப்புகள் இடம்பெற்றன.
அதில் கோவை - திருப்பூர் - ஈரோடு - சேலம் வழித்தடத்தில் மணிக்கு 160 கி.மீ. வேகத்தில் இயங்கும் ஆர்.ஆர்.டி.எஸ். எனும் மித அதிவேக ரயில்வே சேவைகள் (Regional Rapid Transit System) அமைக்கப்படும் எனவும் இதற்கான சாத்தியக்கூறு ஆய்வுகள் நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டது.
இந்த நிலையில் தமிழகத்தில் கோவை உள்பட பிற இடங்களில் இந்த அதிவேக ரயில் சேவைகளை அறிமுகம் செய்வதற்கான சாத்தியக்கூறு ஆய்வு பணிகளுக்கான டெண்டரை கோரியது சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம்.
தமிழகத்தில் மொத்தம் 3 மண்டலங்களில் இந்த சேவை வழங்குவதற்கான ஆய்வு நடைபெறும். டெண்டரில் தேர்வாகும் தனியார் நிறுவனம், இந்த திட்டத்திற்கான மதிப்பீடு தயாரித்தல், இதற்கான ரயில்வே ஸ்டேஷன் அமைத்தல், இந்த சேவை மூலம் தோராயமாக எத்தனை பயணிகள் பயனடைவர் என்பது உள்ளிட்ட பல்வேறு தகவல் அடங்கிய அறிக்கையை மெட்ரோ நிறுவனத்திடம் சமர்ப்பிக்கும்.
அதற்கு பின்னர் தேவைப்படும் இடங்களில் அறிக்கையை மெட்ரோ நிறுவனம் தமிழக அரசிடம் சமர்ப்பிக்கும். இதற்கு பின்னர் இதற்கான நிதி உதவி மத்திய அரசு மற்றும் உலக வங்கி மூலம் பெற நடவடிக்கை எடுக்கப்படும் என தெரியவருகிறது.
2025 பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட ரயில் சேவை தொடர்பான பணிகளுக்கு வேலைகள் வேகமாக நடைபெறுகிறது என்பது மகிழ்ச்சியளிக்கிறது. அதே சமயம் 2023ல் தமிழக அரசு கொடுத்த இந்த அறிவிப்பு எப்போது நடைபெறும் என கோவை மக்கள் எதிர்பார்த்து காத்துவருகின்றனர்.