பில்லூர் அணை கோவை மாநகரின் குடிநீர் தேவைகளை பூர்த்திசெய்யும் மிகமுக்கியமான ஒரு அணை. இதன் மூலம் பில்லூர் 1 முதல் 3 ஆகிய குடிநீர் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுவருகிறது.

மேட்டுப்பாளையம் பகுதியில் 1966ல் கட்டி முடிக்கப்பட்டு செயல்பாட்டுக்கு இந்த அணை வந்தது. கோவையை சிறுவாணி கைவிடும்போது இது தான் மிகவும் உதவிகரமாக இருந்துவருகிறது. ஆனால் இந்த அணை கடந்த 55 ஆண்டுகளுக்கும் மேலாக தூர்வாரப்படாமல் உள்ளது.

மொத்தம் 100 அடி கொள்ளளவு கொண்ட இந்த அணையில் 57 அடி வரை வண்டல் மண் தான் உள்ளது. இதன் காரணமாக அணையில் வெறும் 43 அடி வரை மட்டுமே நீரை நிரப்ப முடியும் என்பது கடந்த ஜனவரி மாதம் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் மின் பகிர்மான கழகம் நடத்திய ஆய்வில் தெரியவந்தது.

எனவே இந்த அணையை தூர் வாரினால் தான் கோவை மாவட்டம் கோடை காலங்களில், கடும் வறட்சிக்காலங்களில் தப்பிக்கும் என்பதால் இதை தூர் வர திட்டமிடப்பட்டது. ஆனால் இதை அவ்வளவு எளிதாக செய்யமுடியாது. 1991 ஆம் ஆண்டில் முயற்சிகள் எடுத்தபோது அது முடியாமல் போனது. 

பில்லூர் அணையில் நீர் தேக்கம் குடிநீர் திட்டங்களுக்கு மிகவும் அவசியம் என்பதால் அணையில் நீரின் அளவு முற்றிலும் குறைந்த பின்னர் தூர்வாரலாம் என்ற முடிவையும் எடுக்கமுடியாது.

அணையில் 'சில்ட் இஜெக்ட்டர்' எனும் அமைப்பு இருந்திருந்தால் அவ்வப்போது வண்டல் மணலை தேவைப்படும் போது சுலபமாக வெளியேற்றி இருக்கலாம். ஆனால் அந்த பில்லூர் அணை மட்டுமல்ல, தமிழகத்தில் உள்ள பவானிசாகர், மேட்டூர் அணை மற்றும் பலவற்றில் இந்த அமைப்பு இல்லை. (இந்த அமைப்பு கல்லணை மற்றும் முக்கொம்பு அணை ஆகியவற்றில் உள்ளது). எனவே இந்த அணையை தூர் வாருவது என்பது மிகப்பெரிய சாவல் தான்.

எனவே இந்த அணையை எப்படி தூர் வாருவது என கடந்த மாதம் அரசு ஆலோசனை நடத்தி, அதற்கான தொழில்நுட்பத்தை கண்டராய்ந்து, அணையை தூர் வாரும் திட்டம் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் மின் பகிர்மான கழகத்தினால் நடைபெறவுள்ளது. இதற்கான பணிகள் இம்மாதமே துவங்கவுள்ளது.

எந்த முறையில் தூர்வாரும் பணி நடைபெறவுள்ளது? 

'ஜியோ டியூப்' எனும் தொழில்நுட்பம் வழியாக இந்த அணையில் உள்ள வண்டல்மணலை அகற்றலாம் என திட்டமிடப்பட்டுள்ளது. பில்லூர் அணை அமைந்துள்ள பகுதியில் பல ட்ரக்குகள் மூலம் இதற்கான இயந்திரங்கள் கொண்டுவரப்பட்டு அங்கு முதலில் அவற்றை பொருத்தும் பணிகள் நடைபெறும்.

பின்னர் முதலில் புளோட்டிங் ட்ரெட்ஜ்ர் (floating dredger) எனும் மிகப்பெரிய மிதக்கும் அமைப்பு மூலம் அணையில் சேர்ந்துள்ள வண்டல் மணல் மெல்ல மெல்ல எடுக்கப்பட்டு, அதிக வலுமை கொண்ட துணியினால் ஆன ராட்சத டியூப் வழியே செலுத்தப்படும்.

இதற்குள் தண்ணீரும், சகதியும் செல்லும்போது தண்ணீர் வெளியேறி விடும், வண்டல் மண் சேகரமான பின்னர் தனியே எடுக்கப்படும். சொல்வதற்கு எளிதாக இருந்தாலும் இதை செய்வது மிக பெரும் சவால் தான். 

இதுவே முதல் முயற்சி!

தமிழக அரசு ஒரு பெரும் அணையை தூர்வார முயலுவது இதுவே முதல் முறை என தகவல்கள் கூறுகின்றன. மேலும் இதற்கு முன்னர் 'ஜியோ டியூப்' எனும் தொழில்நுட்பம் வழியாக நாட்டிலேயே வேறு எங்கும் அணையை தூர் வாரியது இல்லை. இந்த முறையின் மூலம் வெற்றிகண்டால், அது தமிழகத்தில் உள்ள அணைகளுக்கு மட்டும்மல்ல நாட்டில் உள்ள அனைத்து அணைகளுக்கு உதவிகரமாக அமையும்.