கோவை மண்டல பாஸ்போர்ட் அலுவலகத்தின் கட்டுப்பாட்டில் கோவை, நீலகிரி, திருப்பூர், ஈரோடு, சேலம், நாமக்கல் ஆகிய 6  மாவட்டங்கள் வருகிறது. 


 கடந்த 2 மாதங்களாக சில நாடுகள் குறிப்பாக அமெரிக்கா, கனடா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் படிக்க  செல்பவர்கள், வேலைக்காக செல்பவர்கள் அதிலும் குறிப்பாக நிரந்தர குடியுரிமைக்காக செல்பவர்கள் கட்டாயம் போலீஸ்  அனுமதி சான்றிதழ்(போலீஸ் கிளியரன்ஸ் சர்டிபிகேட்) பெற்றுத் தான் தங்கள் நாட்டுக்குள் வர வேண்டும் என்ற பு-திய  நடைமுறையை கொண்டு வந்துள்ளன. 


இதே போல சவுதி அரேபியா நாட்டுக்கு எந்த வேலைக்காகவும் புதிதாக செல்பவர்கள்  கண்டிப்பாக போலீஸ் கிளியரன்ஸ் சர்டிபிகேட் பெற வேண்டியது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்த புதிய உத்தரவால் வெளிநாடு  செல்பவர்களிடையே கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. அதிலும் குறிப்பாக ஐரோப்பிய நாடுகளுக்கு சென்று குழந்தை பெற்றுக்கொண்டு நிரந்தர குடியுரிமை (பி.ஆர்.) பெற நினைப்பவர்கள் போலீஸ் கிளியரன்ஸ் சான்றிதழ் பெறுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

அந்த நாட்டுக்கு செல்பவர்கள் விசாவுக்காக விண்ணப்பிக்கும் போதே போலீஸ் கிளியரன்ஸ் சர்டிபிகேட்டையும்  இணைக்க வேண்டும்.


இதுகுறித்து கோவை மண்டல பாஸ்போர்ட் அதிகாரி கே.பால் ரவீந்திரன் கூறியதாவது:


ஏற்கனவே பாஸ்போர்ட் வைத்திருப்பவர்களும், பு-திதாக பாஸ்போர்ட் கேட்டு விண்ணப்பிப்பவர்களும் போலீஸ் கிளியரன்ஸ்  சர்டிபிகேட் பெறுவதை சில நாடுகள் கட்டாயமாக்கி உள்ளன. இந்த புதிய உத்தரவு கடந்த 2018ம் ஆண்டே நடைமுறைக்கு வ ந்திருந்தாலும் பெரும்பாலான நாடுகள் அதை வலியுறுத்தவில்லை.


ஆனால் கடந்த 2 மாதங்களாக அமெரிக்கா, கனடா, ஐரோப்பிய நாடுகள் மற்றும் சவுதி அரேபியா ஆகிய நாடுகள் இந்த நடைமுறையை கட்டாயமாக்கி உள்ளன. ஏற்கனவே பாஸ்போர்ட்  வைத்திருப்பவர்கள் அனைவரும் போலீஸ் சரிபார்ப்பு முடித்து அதன்பின்னர் தான் பாஸ்போர்ட் அவர்களுக்கு கிடைத்திருக்கும். 


 அப்படிப்பட்டவர்களும் தற்போது அந்த நாடுகளுக்கு செல்ல வேண்டுமென்றால் போலீஸ் கிளியரன்ஸ் சான்றிதழ் பெற வேண்டும்.  பாஸ்போர்ட் வைத்திருப்பவர்கள் ஆன்லைனில் போலீஸ் கிளியரன்ஸ் சான்றிதழ் கேட்டு விண்ணப்பிக்கும் போது அதற்கான  கட்டணம் ரூ. 500 செலுத்த வேண்டும். 


அதன்பின்னர் பாஸ்போர்ட் சேவை மையத்துக்கு சென்று சான்றிதழ்களை சரிபார்த்த  பின்னர் பாஸ்போர்ட் அலுவலகம் மூலம் விண்ணப்பதாரர் வசிக்கும் எல்லைக்குட்பட்ட போலீஸ் நிலையத்துக்கு போலீஸ்  அனுமதிக்காக அனுப்பி வைக்கப்படும். 21 நாட்களுக்குள் அந்த சரிபார்ப்பு முடிந்த பின்னர் போலீஸ் அனுமதி சான்றிதழ்  விண்ணப்பதாரர்களுக்கு ஆன்லைனில் அனுப்பி வைக்கப்படும். 


அந்த சான்றிதழில் இந்த நாட்டுக்கு இந்த நோக்கத்துக்காக  செல்பவர்களுக்கான போலீஸ் அனுமதி சான்றிதழ் என்று குறிப்பிடப்பட்டு இருக்கும். சுற்றுலா செல்பவர்களுக்கு இந்த நடைமுறை  பொருந்துமா என்று தெரியவில்லை. அதுபற்றிய தகவல் எதுவும் தெரியவில்லை.


ஏற்கனவே வெளிநாட்டில் வேலை செய்த நிறுவனத்தில் பணியாற்றிக் கொண்டிருப்பவர்கள் விடுமுறைக்காக இங்கு வந்து திரும்பி  செல்லும் போது அவர்கள் இத்தகைய சான்றிதழ் பெற வேண்டியதில்லை. ஆனால் ஒரு கம்பெனியில் வேலையை விட்டு விட்டு  மற்றொரு கம்பெனிக்கு வேலைக்காக அதே நாட்டுக்கு செல்பவர்கள் இந்த நடைமுறையை பின்பற்ற வேண்டும். இதற்காக கோவை  மற்றும் சேலத்தில் உள்ள பாஸ்போர்ட் சேவை மையங்களில் போலீஸ் அனுமதி சான்றிதழ் கேட்டு விண்ணப்பிக்கும் வசதிகளும்  செய்யப்பட்டுள்ளன. இதன் மூலம் அவர்களுக்கு விரைவில் அந்த சான்றிதழ் கிடைக்க வழி ஏற்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.


ஒருவர் பாஸ்போர்ட் எடுத்தால் அது 10 ஆண்டுகளுக்கு பிறகு தான் புதுப்பிக்கப்படுகிறது. இதற்கிடையில் அந்த நபர் மீது ஏதாவது  குற்ற வழக்குகள் பதிவானால் அதுபற்றிய விவரங்கள் அவருடைய பாஸ்போர்ட்டில் இடம் பெறாது.


இதனால் அத்தகைய நபர்கள்  வெளிநாடுகளுக்கு சென்று வருவார்கள். அந்த நபர்கள் தங்கள் நாட்டுக்குள் வருவதை தடை செய்யும் நோக்கத்தில் குறிப்பிட்ட நாடுகள் மட்டும் இந்த நடைமுறையை கட்டாயமாக்கி உள்ளன. அதிலும் குறிப்பாக வெளிநாடுகளில் குடியுரிமை பெற வேண்டும்  என்ற நோக்கத்தில் அங்கு செல்பவர்களை கண்காணிப்பதற்காகவும் இந்த நடைமுறையை கொண்டு வந்திருக்கலாம்.


இதன் மூலம்  அவரின் குற்றச் செயல்களை கண்டறிய முடியும். சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டாலும் அதுவு-ம் இதில் தெரிந்து விடும். இந்த  புதிய நடைமுறையின் மூலம் குற்ற செயல்களில் ஈடுபடுபவர்கள் வெளிநாடு செல்வது தடை செய்யப்படும் என்று காவல் துறை சேர்ந்த தகவல்கள் கூறுகின்றன.