கோவை மாநகர் உக்கடம் பகுதியில் கட்டப்பட்டு வரும் மேம்பால பணிகளுக்காக உக்கடம் பேருந்து நிலையக் கட்டடம் இடிக்கும் பணிகள் 2023 ஜனவரியில் ஆரம்பமானது.

உக்கடம் பகுதியில் மேம்பாலத்தின் இறங்கு தளம் நரசிம்மா் கோயில் அருகே வட்ட வடிவில் அமைக்கப்பட்டுள்ளது. இதன் ஏறுதளம் உக்கடம் பேருந்து பணிமனையில் இருந்து தொடங்குகிறது. இந்நிலையில் மேம்பால கட்டுமானப் பணிகளுக்கு வசதியாக உக்கடம் பேருந்து நிலையம் மாற்றி அமைக்கப்பட்டது.

தற்போது மேம்பாலப்பணிகள் கிட்டத்தட்ட முடிவுக்கு வந்துள்ளது. இந்நிலையில் கடந்த மார்ச் மாதம் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் பொள்ளாச்சியில் நடைபெற்ற அரசு நிகழ்ச்சியில்,  ரூ.20 கோடி மதிப்பீட்டில் உக்கடம் பேருந்து நிலையம் நவீன முறையில் மறு சீரமைக்கப்படும் என அறிவித்தார். இந்நிலையில் அண்மையில் பேருந்து நிலைய வளாகத்தில் சீரமைப்பு பணிகள் துவங்கி நடைபெற்று வருகிறது. 

இன்று கோவை மாநகராட்சி ஆணையாளர் சிவகுரு பிரபாகரன் உக்கடம் பேருந்து நிலையத்தில் சீரமைக்கும் பணி நடைபெற்றுவருவதை நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். பணிகளை தரமாக நடத்திட அறிவுறுத்தல்கள் வழங்கினார்.

அவர் உடன் மாநகர தலைமைப் பொறியாளர் அன்பழகன், நகரமைப்பு அலுவலர் குமார், நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்டப்பொறியாளர் மணிவண்ணன், மாநகராட்சி செயற்பொறியாளர் கருப்பசாமி, உதவி பொறியாளர் சதீஷ்குமார் ஆகியோர் ஆய்வு பணி செய்தனர்.