சி.சி.டி.வி. கேமராக்கள் பொருத்துவதனால் அது பொருத்தியவருக்கு மட்டுமல்லாமல் அந்த வழியே செல்லும் அனைத்து பொது மக்களுக்கும் ஒருவகையான பாதுகாப்பை தரும் என்பது சில தருணங்களில் தான் தெரியவரும்.

அப்படிப்பட்ட சம்பவம் ஒன்று கோவையில் நடைபெற்றுள்ளது. கோவை மாநகரில் பிப்ரவரி முதல் மார்ச் மாதம் வரை வெவ்வேறு நாட்களிலும் இடங்களிலும் பைக்கில் வந்து பெண்களிடம் இரவு நேரத்தில் தங்க சங்கிலிகளை பறித்துச்சென்ற மர்ம நபரை சிறப்பாக புலனாய்வு செய்து கோவை மாநகர காவல் துறையினர் பிடித்துள்ளனர். அவனிடம் இருந்து 14 பவுன் (114 கிராம்) தங்க சங்கிலிகளை மீட்டுள்ளனர். 

நாகப்பட்டினத்தை சேர்ந்தவன் வேதமணி (21). இவன் கோவை மாவட்டம் சூலூரில் உள்ள ஒரு தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் டிப்ளமோ முடித்துள்ளான். திருட்டு சம்பவங்கள் செய்வதாற்காக நாகப்பட்டினத்தில் இருந்து பேருந்து மூலம் திருப்பூர் வரும் இவன், அங்கு வந்து தனது நண்பன் ஒருவரிடம் பைக் ஒன்றை கடனாக வாங்கிக்கொண்டு கோவை வந்து, அங்கு செயின் திருட்டு சம்பவங்களை செய்துவிட்டு பதுங்கி வந்துள்ளான்.

வண்டியை நண்பனிடம் பெற்று விட்டு திருப்பூரில் இருந்து கோவை மாவட்ட எல்லைக்குள் வரும் முன்னர் போலி நம்பர் பிளேட்டை பொருத்திக்கொண்டு கோவைக்குள் வருவதை வழக்கமாக கொண்டுள்ளான்.

இந்நிலையில் கடைசியாக மார்ச் 18 ஆம் தேதி கோவை ராமநாதபுரம் மற்றும் போத்தனூர் காவல் நிலையங்களுக்கு உட்பட்ட இடங்களில் திருட்டு சம்பவங்கள் செய்துவிட்டு கோவை மாநகரை விட்டு வெளியேறி இருக்கிறான்.

அங்கிருந்து வேறு நம்பர் பிளேட்டை பொருத்தி கொண்டு வெளியே தப்பித்துளான். இவனால் பாதிக்கப்பட்ட பெண்கள் சரியான நேரத்திற்கு காவல் துறையினரிடம் புகார் கொடுக்காமல் இழுத்தடித்து உள்ளனர். இதனால் இவனை பிடிப்பது காவல் துறைக்கு சற்று சவாலாக இருந்துள்ளது.

ஆனால் எல்லோரும் பாதிக்கப்பட்டது இரவு 8 - 9 மணிக்குள் தான் என்பதையும் இந்த குற்றங்களை செய்ய குற்றவாளி பயன்படுத்தியது க்ரே நிற அப்பச்சி ஆர்.டி.ஆர். 200 ரக வண்டியும் தான் என்பதை காவல் துறையினர் புலனாய்வு மூலம் கண்டுபிடித்தனர்.

கோவை மாநகரில் இருந்து திருப்பூர் வரை உள்ள 60 கிலோ மீட்டர் தொலைவுக்குள் உள்ள 600 சி.சி.டி.வி. கேமரா காட்சிகளை கைப்பற்றி, விசாரணை மேற்கொண்டு உண்மையான நம்பர் பிளேட் எண்ணை தெரிந்துகொண்டு காவல்துறையினர் அந்த வாகனத்தின் உரிமையாளரை அணுகினர்.

அப்போதுதான் வண்டி உரிமையாளருக்கே தனது வண்டியை நண்பர் வாங்கிக்கொண்டு இப்படி பட்ட சம்பவங்கள் செய்வது தெரியவந்தது. அவர் மூலம் குற்றவாளி வேதமணியை கோவை மாநகர காவல் துறையினர் நெருங்கி, அவனை கைது செய்து 114 கிராம் தங்கத்தை மீட்டு, அவனை கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.

சிறப்பாக செயல்பட்ட கோவை மாநகர காவல் துறைக்கு பாராட்டுக்கள்.

வாசகர்களுக்கு:- குற்றம் நடந்தால் காவல் துறையினரிடம் தெரிவித்து, கட்டாயம் முதல் தகவல் அறிக்கை பதிவதை யவரேனும் பாதிக்கப்பட்டால் கட்டாயம் பின்பற்றவேண்டும். அதேபோல முடிந்தால் சி.சி.டி.வி. கேமராக்கள் வீடுக்கு வெளியே கண்காணிப்புக்கு பொருத்திட வேண்டும். இந்த கைதுக்கு உதவிகரமாக இருந்த அந்த 600 சிசிடிவி கேமரா காட்சிகளில் பலவும் வீடுகளில் பொருத்தப்பட்ட கேமராவாகவும் இருக்கலாம்.