கோவை மாநகர பாஜக சார்பில், பிரதமர் நரேந்திர மோடியின் 75-வது பிறந்தநாளை முன்னிட்டு, 'மோடியின் தொழில் மகள்' என்ற நிகழ்ச்சி கணபதி பகுதியில் உள்ள வாஜ்பாய் திடலில் நடைபெற்றது. இந்நிகழ்வில், 1,500 பெண்களுக்கு தையல் இயந்திரங்கள், கிரைண்டர்கள், ஆட்டோக்கள் போன்ற 18 வகையான இலவச தொழில் உபகரணங்கள் வழங்கப்பட்டன.

 

மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார். மேலும், பா.ஜ.க.வின் தமிழிசை சௌந்தர்ராஜன், வானதி சீனிவாசன், நயினார் நாகேந்திரன், அரவிந்த் மேனன், மற்றும் அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களான கே.ஆர். ஜெயராமன், அம்மன் அர்ஜுனன் ஆகியோர் இதில் பங்கேற்றனர்.

 

மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி பேசுகையில், இந்தியாவில் 2014-ல் 23 சதவீதமாக இருந்த பெண்களின் வேலைவாய்ப்பு தற்போது 42 சதவீதமாக உயர்ந்துள்ளது என்றார். பிரதமர் ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் பயனாளிகளில் 73% பெண்கள் எனவும், தமிழக அரசு மத்திய அரசின் திட்டங்களைச் சரியாகச் செயல்படுத்துவதில்லை எனவும் குற்றம்சாட்டினார். மேலும், ஜிஎஸ்டி வரி சீர்திருத்தத்தால் உணவுப் பொருட்களின் விலை குறைந்திருப்பது பொதுமக்களுக்குப் பயனுள்ளதாக அமைந்துள்ளது என்றும் அவர் கூறினார்.